இலங்கை- மேற்கிந்திய தீவு முதல் டெஸ்ட் போட்டி இன்று - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

இலங்கை- மேற்கிந்திய தீவு முதல் டெஸ்ட் போட்டி இன்று

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத கடந்த வாரம் இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணமானது. இரு அணிகளும் மோது முதல் டெஸ்ட் போட்டி இன்று 6ம் திகதி டிரின்டிடாட் மைதானத்தில் நடைபெறுகிறது.

தினேஷ் சந்திமாலின் தலைமையில் சென்றுள்ள இலங்கை அணியில் காயம் காரணமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸும் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலும் கடந்த இரு வாரங்களாக கண்டியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்டு தங்கள் உடல் தகுதியை நிரூபித்துள்ளனர்.

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 94 புள்ளிகளுடன் 6வது இடத்திலிருக்கும் இலங்கை அணி அதைவிட பின் வரிசையில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகளை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதால் இலங்கை அணி கடும் சவாலை எதிர்நோக்க நேரிடும்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மேற்கிந்திய ஆடுகளங்களில் இலங்கை அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலுடன் இளம் வீரர்களான லஹிரு குமார. ஹசித பெர்னாந்து இடம்பெற்றுள்ளனர். வழமையாக முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பின் இலங்கை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிவரும் 40 வயதை எட்டும் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேத்தையே இலங்கை அணி பந்து வீச்சில் பெரிதும் நம்பியுள்ளது.

அண்மைக்காலமாக இவருடன் இணைந்து டில்ருவன் பெரேராவும் சிறப்பாகச் செயற்பட்டு வருவதால் மேற்கிந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இவர்களிருவரும் சவாலாயிருப்பார்கள். இலங்கை அணியில் ரங்கன ஹேரத் மட்டுமே இதற்கு முன் அம்மண்ணில் விளையாடியுள்ள ஒரே வீரர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

ரங்கன ஹேரத் போட்டிளில் அதிகமான ஓவர்கள் பந்து வீச வேண்டியுள்ளதால் விரைவில் களைப்படைந்துவிடுகிறார். எனவே இவருக்கு ஒரு போட்டியின் பின் மற்றைய போட்டிக்கு ஓய்வு வழங்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் தலைவர் தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் நல்ல நிலையிலேயே உள்ளார். இவருடன் குசல் மெண்டிஸ், அதிரடி வீரர் குசல் பெரேரா, முன்னாள் தலைவர் மெத்தியூஸ் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளில் திறமையாகச் செயற்படுவார்கள் என நம்பப்படுகிறது.

பாபடோஸில் இம்மாதம் 23ம் திகதி ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இலங்கை- மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான முதலாவது பகலிரவுப் போட்டியாகவும் அமையவுள்ளது.

மேற்கிந்திய தீவுகளைப் பொறுத்தவரை சகலதுறை வீரர் ஜேஸன் ஹோல்டரின் தலைமையில் அண்மைகாலமாக இளம் வீரர்கள் திறமையாக விளையாடினாலும் அவ்வணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு வீரர்கள் தற்போதைய மேற்கிந்திய அணியில் இல்லை. 

கிரேன் பவல். ரொஸ்டன் சேஸ், சாய் ஹோப் போன்ற இளம் வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பர். மூன்று வருடங்களின் பின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவோன் ஸ்மித்தும் இத்தொடருக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவ்வணியில் வேகப்பந்து வீச்சில் கெரூன் ரோச், சொலமன் கேப்ரியல் அண்மைக்காலமாக சிறப்பாகப் பந்து வீசி வருகின்றனர். என்றாலும் அவர்களின் முக்கிய துருப்பச்சீ்ட்டாக சுழற் பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷோவேயுள்ளார். மேற்கிந்தியத்தீவுகளின் அண்மைய ஒருசில டெஸ்ட் வெற்றிகளுக்கு இவரின் பந்து வீச்சே கைகொடுத்தது. இரு அணிகளும் சமபல அணியாகவேயுள்ளதால் இத்தொடர் இரு அணிகளுக்கும் கடும் சவாலாவே அமையப் போகின்றது.

இரு அணிகளுக்குமிடையில் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகள் நடைபெறறுள்ளன. இவற்றில் இலங்கை 8 வெற்றிகளையும், மேற்கிந்திய அணி 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 6 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.

மேற்கிந்தியத்தீவுகளில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரையும் வென்றிராத இலங்கை அணி அவ்வணிக்கெதிராக மேறகிந்தியத் தீவுகள் மண்ணில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே வென்றுள்ளது.

இலங்கை- மேற்கிநதியதீவுகள் டெஸ்ட் வரலாற்றில் இதுவரை மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்ட வீரர் பிரயன் லாராவே கூடுதலான ஓட்டமாக 1125 ஓட்டங்களைப் பெற்று முதலிடத்திலுள்ளார். பந்து வீச்சில் இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 82 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலுள்ளார்.

போட்டி அட்டவணை
ஜூன் 06-- - 10
முதலாவது டெஸ்ட் ட்ரினிடாட்
ஜூன் 14-- -18
இரண்டாவது டெஸ்ட் சென். லூசியா
ஜூன் 23-- - 27
மூன்றாவது டெஸ்ட் பாபடோஸ்

No comments:

Post a Comment