காந்தி பூங்கா தற்போது ஆர்ப்பாட்டங்களுக்கே உரியதான இடமாக மாறியுள்ளது - அரச அதிபர் எம்.உதயகுமார் - News View

About Us

About Us

Breaking

Friday, June 22, 2018

காந்தி பூங்கா தற்போது ஆர்ப்பாட்டங்களுக்கே உரியதான இடமாக மாறியுள்ளது - அரச அதிபர் எம்.உதயகுமார்

மட்டக்களப்பு காந்தி பூங்கா என்பது ஒரு அழகான இடம். மட்டக்களப்பின் மையமாக ஒரு பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட இடம். ஆனால் தற்போது அது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரியதான இடமாக மாறியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (22) உன்னிச்சை நீர்ப்பாசனத் திணைக்கள் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இக்கூட்டமானது இரு சாராருக்கும் கிடைத்திருக்கும் வெற்றியும் அரிய சந்தர்ப்பமுமாகும். அமைப்புகள் என்பது றபான் போன்றது ஒரு பக்கம் மாத்திரம் தான் அடிவிழும் ஆனால் மாவட்ட நிர்வாகம் என்பது மத்தளம் போன்றது இரண்டு பக்கங்களும் அடி விழும். 

உன்னிச்சை விடயம் தொடர்பில் இரு சாராருடனும் கலந்துரையாடியிருந்தேன். இருசாராரும் மிக நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த விடயம் தொடர்பில் பொறியியலாளர்கள் தரப்பில் இருந்து நான் விவசாயிகளுக்குச் சார்பாக நடந்து கொண்டதாகவும், விவசாயிகள் தரப்பில் இருந்து நான் அதிகாரிகளுக்குச் சார்பாக நடந்து கொண்டேன் என்றவாறான பல்வேறு கதைகள் பரப்பப்பட்டன. 

அதற்கும் மேலாக பத்திரிகைச் செய்தி ஒன்று பார்த்தேன் கொழும்பில் இருக்கும் ஒரு உயரதிகாரி அறிக்கை விட்டிருக்கின்றார் மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்ற பலவீனம் தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்று. 

அவ்வாறு அறிக்கை விடுபவர்கள் மாவட்ட நிர்வாகம் தொடர்பில் விளங்கிக் கொள்ள வேண்டும். எங்களால் சில நடவடிக்கைகள் எடுக்கப்படாது விட்டிருந்தால் இன்று இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றிருக்காது. ஒரு மாதம் கூட இன்னும் ஆகவில்லை ஆனால் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தி இணக்கப்பாட்டினை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

இது ஒரு சிறந்த சகுனமாகவே நான் பார்க்கின்றேன். ஏனெனில் இலங்கையில் நடந்த யுத்தம் சம்மந்தமான தீர்வுகளை இன்று தான் தேடிக்கொண்டிருக்கின்றார்கள், அது போல் 02ம் உலகப் போரில் ஜப்பான் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு அமெரிக்கா அண்மைக் காலத்தில் தான் அதன் மனவருத்தத்தைத் தெரிவித்தது. 

ஆனால் நாங்கள் ஒரு மாத காலத்திற்குள் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட பிணக்கு தொடர்பில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். இது ஒரு மகிழ்ச்சியான விடயம்.

எதிர்காலத்தில் இருசாராரும் சுமுகமாக செயற்பட வேண்டும். அதிகாரிகளுக்கான ஒத்துழைப்புகளை விவசாயிகளும் விவசாயிகளுக்கான ஒத்துழைப்புகளை அதிகாரிகளும் வழங்க வேண்டும். எந்த ஒரு விடயத்தையும் உணர்ச்சிவசப்பட்டு அணுகுவதை விட உணர்வு பூர்வமாக அணுகப் பழக வேண்டும்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா என்பது ஒரு அழகான இடம். மட்டக்களப்பின் மையமாக ஒரு பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட இடம். ஆனால் தற்போது அது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரியதான இடமாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு விதமாக எம்மை விமர்சித்திருக்கின்றார்கள். எங்கள் பெண் அதிகாரிகளைக் கூட விமர்சித்திருக்கின்றார்கள். பெண்களை தெய்வமாக வழிபடும் சமூகத்தில் இருந்து கொண்டே பெண்களை அவதூறு செய்யும் செயற்பாடும் இடம்பெற்றது. அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு நாங்கள் எங்கள் சேவைகளைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

கொழும்பில் இருக்கும் அதிகாரிகள் எங்கள் நிர்வாகத்தை மதிப்பிட வேண்டியதில்லை. அரசாங்க அதிபர் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றார்கள் என்று அமைச்சு ரீதியிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. 

நீர்ப்பாசனத் திணைக்களம் என்பது ஒரு திணைக்கம் மாத்திரம் ஆனால் எம்மைப் பொருத்தவரையில் இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து திணைக்களங்களுடனும் சேர்ந்து செயற்பட்டு இந்த மாவட்டத்தைக் கொண்டு நடத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அதனை நாங்கள் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment