தமது பணிப்பகிஷ்கரிப்பிற்கு 30-க்கும் அதிகமான துறைசார் தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்குவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.
துறைமுகம், மின்சாரம், ரயில், கல்வி, சுகாதாரம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், இலங்கை வர்த்தகர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல், அவர்களுடன் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.
தபால் தொழிற்சங்கத்தின் போராட்டம் இன்று (23) 13வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுவதுடன், தற்போது அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னர் இருந்தது போன்று பதவி உயர்வு மற்றும் பதவி நிரந்தரமாக்கல் ஆகியவற்றை தொடர்ந்து அமுல்படுத்த வலியுறுத்தி கடந்த 11ம் திகதி அவர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக கொழும்பில் உள்ள தபால் தலைமையகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களின் பிரதான கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
ஊழியர்களுக்கு உரிய தீர்வை வழங்கிய போதிலும் பணிப்பகிஷ்கரிப்பைத் தொடர்கின்றமை நியாயமற்றது என அமைச்சர் அப்துல் ஹலீம் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment