யாழில் இருந்து விடை பெறுகிறார் நீதிபதி இளஞ்செழியன்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 23, 2018

யாழில் இருந்து விடை பெறுகிறார் நீதிபதி இளஞ்செழியன்!

திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அரச சட்டவாதிகள் நாகரட்னம் நிஷாந்த், திருமதி பிரிந்தா ரெஜிந்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், மேல் நீதிமன்ற வலயக் கணக்காளர் வெல்லவராஜன் ரதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள், மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவையைப் பாராட்டி உரையாற்றினர்.

மேலும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து வாழ்த்துப் பாமலை மற்றும் நினைவுச் சின்னம் என்பனவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நலன்புரிச் சங்கம் சார்பில் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் வழங்கி வைத்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக கடமையாற்றிய அவர், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக வரும் 28ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.

No comments:

Post a Comment