வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் உடன் ஜுன் 12 ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருக்கும் சந்திப்பு தாமதிப்பதற்கு கணிசமான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கிம் தனது அணு ஆயுத களைவுக்கு எதிர்ப்பு வெளியிடும் நிலையிலேயே டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை கடந்த செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் சந்தித்தபோதே டிரம்ப் சிங்கப்பூரில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கும் வரலாற்று சந்திப்பு குறித்து சந்தேகத்தை வெளியிட்டார். எனினும் தனித்திருக்கும் வட கொரியாவுடனான இந்த அரிதான வாய்ப்பை பிற்போட வேண்டாம் என்று தென் கொரிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கிம் உடனான சந்திப்பில் ‘எதை எதிர்பார்க்கலாம், எதை எதிர்பார்க்கக்கூடாது’ என்பதை விளக்கவே மூன் ஜே இன் அமெரிக்கா சென்றுள்ளதாக தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது ஜனாதிபதி பதவி காலத்தில் மிகச் சிறந்த இராஜதந்திர வெற்றியாக கருதப்படும் இந்த சந்திப்பு கைவிடப்பட்டால் அல்லது தோல்வியுற்றால் அது டிரம்புக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
“அது (சந்திப்பு) தமாதிப்பதற்கு கணிசமான வாய்ப்பு உள்ளது. என்றாலும் பிரச்சினை இல்லை” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். “இதற்காக அது முற்றாக நடைபெறாது என்று அர்த்தம் இல்லை. ஆனால் ஜுன் 12இல் நடைபெறாமல் இருக்கலாம். ஆனால் நாம் சந்திப்பதற்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
எனினும் திட்டமிட்டபடியோ மிக விரைவாகவோ சந்திப்பு இடம்பெறும் என்று டிரம்ப் உறுதி அளித்தார். “சிறந்த ஒரு நாடாவதற்கு வட கொரியாவுக்கு கிடைத்த வாய்ப்பை அவர்கள் பற்றிப்பிடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார் டிரம்ப்.
ஜுன் 12 சந்திப்பை திட்டமிட்டபடி நடத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் பொம்பியோ பின்னர் செய்திாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த திகதியில் உறுதியாக நடக்கும் என்பதை கூறுவதற்கு அவர் மறுத்துள்ளார்.
இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு வட கொரியா சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டி இருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த நிபந்தனைகள் என்னவென்று அவர் கூறவில்லை.
முன்னதாக அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக அணு ஆயுத களைவை வலியுறுத்தினால் இந்த உச்சிமாநாட்டை ரத்துச் செய்வதாக வட கொரியா எச்சரித்திருந்தது.
இரு கொரியாக்களுக்கும் இடையில் இடம்பெற்ற வரலாற்று சந்திப்பை அடுத்தே ஜுன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க மற்றும் வட கொரிய தலைவர்கள் முதல் முறை சந்திக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது, “என்ன நடக்கிறது என்பதை நாம் பார்ப்போம். எமக்கு குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டி இருக்கும், அதனை பெறுவோம் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அது நடக்காவிட்டால் சந்திப்பும் நிகழாது” என்றார்.
இம்மாத ஆரம்பத்தில் இரண்டாவது முறையாக கிம் ஜொங் உன்னின் சீன விஜயத்திற்கு பின்னர் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக டிரம்ப் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இது தமக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத களைவு குறித்து உறுதிகளை அளித்து வந்த வட கொரியா கடந்த ஒரு வாரமாக தமது நிலைப்பாடுகளில் திடீர் மாற்றங்களை வெளியிட்டு வருகிறது. அமெரிக்காவுடனான கூட்டு இராணுவ ஒத்திகையை காரணம் காட்டி வட கொரியா தெற்குடனான உயர்மட்ட சந்திப்பை ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதாக வட கொரியா குற்றம் சாட்டியது. வட கொரியா லிபியா வடிவிலான அணு ஆயுத களைவை மேற்கொள்வதற்கு போல்டன் பரிந்துரைத்ததை அடுத்தே வட கொரியா கோபத்தை வெளியிட்டது.
முன்னாள் லிபிய தலைவர் முஅம்மர் கடாபி 2003 இல் அணு ஆயுதத்தை கைவிட உடன்பட்ட நிலையில் மேற்குல ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவுடன் உடன்படிக்கை எட்டப்பட்டால் லிபிய வடிவை அமெரிக்கா பின்பற்றாது என்று டிரம்ப் பின்னர் நிராகரித்திருந்தார்.
“நாம் உடன்பாடொன்றை எட்டாவிட்டால் பெரும்பாலும் அந்த வடிவம் பின்பற்றப்படலாம். ஆனால் நாம் உடன்படிக்கை ஒன்றை எட்டினால், கிம் ஜொங் உன் மிக்க மகிழ்ச்சி அடைவார் என்று நான் நினைக்கிறேன்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு நடைபெறாமல் இருப்பதற்கான வழிகளில் இரு தலைவர்களும் ஈடுபட்டிருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர்.
எனினும் நல்லெண்ண நடவடிக்கையாக தனது அணு ஆயுத சோதனைத் தளம் ஒன்றை அழிக்க வட கொரியா முன்வந்துள்ளது. மோசமான வானிலையால் அந்தப் பணிகள் தாமதமடைந்துள்ளன.
No comments:
Post a Comment