மலேசிய பாராளுமன்றத்தை கலைக்க மன்னர் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Friday, April 6, 2018

மலேசிய பாராளுமன்றத்தை கலைக்க மன்னர் உத்தரவு

மலேசிய பாராளுமன்றத்தை கலைக்குமாறு மன்னர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்துள்ளார். மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்றத்துக்கு 22-8-2018-க்குள் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும். பிரதமர் நஜிப் ரஜாக் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலம் என முன்னர் 22 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த மஹதிர் முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானித்தது.

முன்னர் மலேசிய துணை பிரதமராக இருந்து ஓரினச் சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது நீண்டகாலமாக பகை பாராட்டி வந்தார்.

தற்போதைய பிரதமர் நஜிப் ரஜாக்கை வீழ்த்துவதற்காக அன்வர் இப்ராஹிமுடன் மஹதிர் முஹம்மது கூட்டணி அமைத்துள்ளார். இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது(92) எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறையில் தண்டனை அனுபவித்துவரும் அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு அரசின் சார்பில் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள அவரை பிரதமர் பதவியில் அமரவைக்க எதிர்க்கட்சிகள் கூட்டணி முயற்சித்து வருவதாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு மற்றும் தொகுதிகளின் எல்லைப்பகுதி சீரமைப்பு ஆகியவற்றால் ஆளும்கட்சி கூட்டணியின் வாக்கு வங்கி சற்றே குறையலாம். எனினும், நஜிப் ரஜாக்கை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு இடங்களை ஆளும்கட்சி மீண்டும் கைப்பற்றும் என்று மலேசிய ஊடகங்கள் கருதுகின்றன.

இந்நிலையில், மலேசிய பாராளுமன்றத்தை நாளை (7-ம் தேதி) கலைக்குமாறு மன்னர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நஜீப் ரசாக் இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து இன்னும் 60 நாட்களுக்குள் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இன்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய நஜிப் ரசாக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது தலைமையிலான கூட்டணி அரசை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் உலகின் மிகச்சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் மலேசியாவை இடம்பெற வைப்போம் என தனது உரையின்போது நஜிப் ரசாக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment