அரசியல்வாதிகளுக்கு மறந்து போன சங்கதி! - News View

About Us

About Us

Breaking

Friday, April 6, 2018

அரசியல்வாதிகளுக்கு மறந்து போன சங்கதி!

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் என்பது உள்ளூராட்சி சபைகளின் நோக்கங்களை மறந்த தேர்தலா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. உள்ளூராட்சி சபைகளில் இருக்கும் குறைகளைப் பற்றி கவனத்தில் கொள்ளாமல் வெறுமனே தேசிய அரசியலுக்காக குரல் கொடுத்த அரசியல் மேடைகளையே எம்மால் காணக்கூடியதாக இருந்தது. உள்ளூராட்சித் தேர்தலும்,தேர்தலின் முடிவுகளும் இலங்கையின் அரசியலில் மிகப் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இலங்கையில் நிலையற்ற அரசியல் சூழலும் இதனால் உருவாகியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

இலங்கை வறுமை ஆராய்ச்சி நிலையம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் வாரங்களில் வெளிவந்த தேர்தல் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் பகுப்பாய்வு ஒன்றை நடத்தியது. இந்தப் பகுப்பாய்வுக்கான நோக்கம் என்னவெனில் உள்ளூராட்சித் தேர்தலில் உறுப்பினர்களும் ஊடகங்களும் இலங்கையின் வறுமை தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் எந்தளவு கவனம் செலுத்துகின்றன என்பதைஆராய்வதேஆகும். 

மக்களின் அபிவிருத்தியை முன்னுரிமைப்படுத்தும் இலங்கை வறுமைஆராய்ச்சி நிலையம் நடத்திய இந்த பகுப்பாய்வின் மூலம் தெரியவந்தது என்னவெனில், உள்ளூராட்சித் தேர்தல் அறிக்கைகளில் பெரும்பாலானவை உள்ளூராட்சி அதிகாரசபைகளின் குறைகள், அபிவிருத்திகளில் முன்னுரிமை செலுத்தவில்லை என்பதாகும். 

அத்துடன் பத்திரிகைகள் முன்னுரிமை வழங்கியது உள்ளூராட்சி தேர்தலுக்கு அன்றி தேசிய அரசியலுக்கே ஆகும். முக்கியமாக சிங்களப் பத்திரிகைகள் மத்தியவங்கியில் நடந்த ஊழலைப் பற்றியும்,நாடளாவிய அளவில் நடக்கும் அல்லது நடந்த ஊழல்கள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்தன. இலங்கையின் கிராமிய அபிவிருத்தி மற்றும் அதில் காணப்படும் குறைகள் பற்றி மிகக் குறைந்தளவிலேயே அனைவரின் கவனமும் இருந்தது. இன்னொரு கட்சியை அல்லது கட்சி உறுப்பினரைத் தாக்கிப் பேசிய வார்த்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. 

வாக்களிப்பதில் வாக்களர்களின் உரிமை தொடர்பிலும்,வாக்களிப்பு என்பது ஜனநாயக முறைக்கு எவ்வளவு முக்கியமென்பது பற்றியும் எழுதப்பட்ட விசேட கட்டுரைகளை பத்திரிகைகளில் காணக் கூடியதாக இருந்தது. அத்துடன் தேர்தல் முறையை பற்றிய பொதுவான செய்திகளும் வெளியாகி இருந்தன. ஆனால் புதிய தேர்தல் முறையைப் பற்றியும்,புதிய தேர்தல் முறையின் கீழ் உறுப்பினர்கள் தெரிவாகும் முறையைப் பற்றியும், பெண் உறுப்பினர்களை தெரிவு செய்வதைப் பற்றியும் குறைந்தளவில் கவனம் செலுத்தியிருந்தனர். 

உள்ளூராட்சி சபைகளைத் தாண்டி, தேசிய அரசியலில் மாற்றத்தை எதிர்பார்த்ததைக் காணக் கூடியதாக இருந்தது. இனப் பிரச்சினை தொடர்பிலும்,மாற்றங்களுக்கான அவசியம் தொடர்பிலும் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் தேசியஅளவில் நடந்த ஊழல்,மோசடிகள் தொடர்பாக அதிகளவிலான பார்வை இருந்தது.பொதுச் சேவைகள் தொடர்பாகவும் உள்ளூராட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பாகவும் குறைந்தளவிலான பார்வை இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 

பத்திரிகைகளில் தேர்தல் பிரசாரமுறை தொடர்பாக கவனம் செலுத்தியிருந்தனர். முக்கியமாகதேர்தல் சட்டங்களை மீறியமை,வேட்பாளர்கள் மீதுதாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாகவும் அதிக கவனத்தை பத்திரிகைகள் செலுத்தியிருந்தன. ஒவ்வொரு கட்சிகளிலும் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது குறிக்கோளாக இருந்தது. பிரதேச வேட்பாளர்களை விட தேசிய மட்டத்திலுள்ள த​ைலமைகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. 

தேர்தல் தொடர்பான அறிவை அல்லது விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது.
தேர்தல் சட்டங்களைப் பேணுவது மற்றும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவது பத்திரிகைகளில் நோக்கமாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இம்முறை புதியமுறையின் கீழ் நடந்த தேர்தல் ஆகும். இருப்பினும் அம்முறையைப் பற்றிய முழுமையான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. 

இந்தத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் மக்களுக்காக பணிபுரிய வேண்டியவர்களாவர். ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தலில் உறுப்பினர்கள் வறுமை தொடர்பாகவோ அல்லது சமத்துவமின்மை தொடர்பாகவோ இல்லையெனில் செய்ய வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகவோ பெரியளவில் கவனம் செலுத்தவில்லை என்றே கூற முடியும். 

2017 ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் இது தொடர்பாக பிரதான கட்சிகள் இரண்டும் மிகவும் குறைந்தளவே கவனம் செலுத்தியிருந்தன. வறுமையை ஒழிப்பதற்காக எதிர்காலத் திட்டங்கள் பற்றிய அறிவுரைகள் வழங்கப்படவில்லை. 

இலங்கை போன்ற நாடுகளில் அபிவிருத்தியைப் பேண வேண்டுமாயின் அடிமட்ட வறுமையை ஒழிப்பது முக்கியம்.உள்ளூராட்சி சபைகளினால் திட்டங்கள் மேற்கொள்வதும் மிகமுக்கியம்.

அனுஷா சிவலிங்கம்
(ஆய்வாளர்) வறுமை ஆராய்ச்சி நிலையம்

No comments:

Post a Comment