திஹாரி, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மல்வத்தை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வர்த்தக நிலையம் ஒன்று தீப்பரவலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிப்போன் செரமிக்கா என்ற தரையோடுகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டது. இதன்போது குறித்த வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியது.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு அண்மையில் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்றும், வாயு தீமூட்டல் கருவியும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டன.
ஏற்கனவே சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த சிங்கள நபரிடம், இவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையை உளறியுள்ளார்.
அவர் சம்பவத்தில் காயமடைந்து கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
சிங்கள நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடை உரிமையாளரே காப்புறுதி பணத்தை பெறும் நோக்கில் 2 லட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படை கடையை தீமூட்டுமாறு தனக்கு பணித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (05) கடையின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
No comments:
Post a Comment