இரு நாடுகளும் தலா ரூ.3¼ லட்சம் கோடி அளவுக்கு வரி உயர்வு: அமெரிக்கா-சீனா வர்த்தக போர் வலுக்கிறது - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

இரு நாடுகளும் தலா ரூ.3¼ லட்சம் கோடி அளவுக்கு வரி உயர்வு: அமெரிக்கா-சீனா வர்த்தக போர் வலுக்கிறது

அமெரிக்கா-சீனா இருநாடுகளும் தலா ரூ.3¼ லட்சம் கோடி அளவுக்கு பொருட்கள் மீதான வரி விதித்தது. இதன் மூலம் இரு நாடுகளின் வர்த்தக போர் வலுக்கிறது. சீனப்பொருட்களுக்கு ரூ.3¼ லட்சம் கோடி அளவுக்கு அமெரிக்கா வரி விதித்தது. பழிவாங்கும் விதமாக அமெரிக்க பொருட்களுக்கு ரூ.3¼ லட்சம் கோடி அளவுக்கு சீனாவும் வரி விதிக்கிறது. இதன் மூலம் இரு நாடுகளின் வர்த்தக போர் வலுக்கிறது.

சீனா மீது அமெரிக்கா ஒரு குற்றச்சாட்டை நீண்ட காலமாக முன் வைத்து வருகிறது. அது, அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை சீனா திருடுகிறது, அது மட்டுமின்றி அமெரிக்காவின் தொழில் நுட்பங்களை சீனா தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருகிறது என்பது ஆகும்.

இந்தக் குற்றச்சாட்டை சீனா நிராகரித்தபோதும், அமெரிக்கா லேசாக விட்டு விடவில்லை. அந்த நாட்டின்மீது, அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யக்கூடிய அலுமினியத்துக்கு 25 சதவீதமும், உருக்குக்கு 10 சதவீதமும் வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு சீனாவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அமெரிக்காவில் இருந்து சீனாவில் இறக்குமதி செய்யப்படுகிற மாமிசம், பழங்கள், பன்றி இறைச்சி ஆகியவை உள்பட 128 பொருட்களுக்கு 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.19 ஆயிரத்து 500 கோடி) அளவுக்கு ஜின்பிங் நிர்வாகம் வரி விதித்தது. இந்த நடவடிக்கை அமெரிக்காவை அதிர வைத்தது.

இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 1,300 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி உயர்த்தி அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் பட்டியல் வெளியிட்டு உள்ளது. 50 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3¼ லட்சம் கோடி) இந்த வரி உயர்வு அமைந்து உள்ளது.

இந்த வரி அதிகரிப்பில் பாதிப்புக்கு உள்ளாகும் துறைகள் விண்வெளி, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம், ரோபோ, எந்திரங்கள் துறைகள் ஆகும். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திறந்த மனதுடன் இருக்கிறோம்; அதே நேரத்தில் வர்த்தகப் போர் வந்தால் இறுதிவரை போரிடுவோம் என்று சீனா அறிவித்து உள்ள நிலையில் இந்த வரி உயர்வு நடவடிக்கையை அமெரிக்கா எடுத்து உள்ளது.

இது குறித்து டிரம்ப், நிருபர்களிடம் பேசியபோது, “சீனாவுடன் எங்களுக்கு பிரச்சினை உள்ளது. அவர்கள் வர்த்தக பற்றாக்குறையை உருவாக்கி உள்ளனர். இதற்கு நமது பிரதிநிதிகளையும், முன்னாள் ஜனாதிபதிகளையும் நான் குற்றம் சாட்டுகிறேன். அவர்களால் ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.32½ லட்சம் கோடி) வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இப்படி வைத்துக்கொண்டு நாம் வாழ முடியாது. அறிவுசார் சொத்து திருட்டு மட்டுமே வருடத்துக்கு 200-300 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.19½ லட்சம் கோடி வரையில்) இழப்பு நடக்கிறது” என டிரம்ப் குறிப்பிட்டார்.

மேலும், “சில நாடுகளுடனான வர்த்தகத்தில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. வர்த்தகப்பற்றாக்குறைக்கு காரணமான சீனாவின் மீது நடவடிக்கை எடுப்பது வெளிப்படையாக அமைந்து உள்ளது” என்றும் கூறினார். அமெரிக்கா 1,300 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் முடிவு எடுத்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய கார், விமானம் உள்ளிட்ட 106 பொருட்கள், சாதனங்களுக்கு 25 சதவீதம் அளவுக்கு வரியை உயர்த்த சீனாவின் ஜின்பிங் நிர்வாகம் முடிவு எடுத்தது. இதுவும் அமெரிக்கா போன்று 50 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3¼ லட்சம் கோடி) அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா-சீனா வர்த்தக போர் வலுப்பது உலக நாடுகளை அதிர வைத்து உள்ளது.

No comments:

Post a Comment