கல்முனை மாநகர சபைக்கு 300 மில்லியன் ரூபா செலவில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய கட்டிடத் தொகுதியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இரண்டு மாதங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இன்று மாநகர சபைக்கு விஜயம் செய்து, உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் நெறிப்படுத்தலில் மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முதல்வர் றக்கீப் மேலும் தெரிவிக்கையில்;
“மிகவும் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்ற எமது கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கம் எல்லோரிடமும் இருந்து வருகின்றது. இதனை எனது பதவிக் காலத்தில் நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில் நான் இருக்கிறேன். இதற்கான நடவடிக்கைகளை எமது பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஏற்கனவே மேற்கொண்டிருக்கிறார்.
அவரது வேண்டுகோளின் பேரில் நகர திட்டமிடல் அமைச்சினால் 300 மில்லியன் ரூபா நிதியை எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் பேரில் புதிய கட்டிட தொகுதிக்கான வரைபடமும் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின்போது மாநகர சபையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆணையாளர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்ட முதல்வர் றக்கீப், அவற்றுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியதுடன் சில விடயங்கள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.
இந்நிகழ்வில் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அன்பு முகைதீன், எம்.எஸ்.உமர் அலி, எம்.எம்.நிஸார், எம்.எஸ்.எம்.சத்தார், மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
அஸ்லம் எஸ்.மௌலானா
No comments:
Post a Comment