மட்டக்களப்பு பட்டதாரிகள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கொண்றை தாக்கல் செய்யவுள்ளதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராக சட்டத்தை நாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மட்டக்களப்பில் வைத்து 03.03.2018 அன்று பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நியமனத்தில் முற்று முழுதாக தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மொழிமூல பட்டதாரிகள் காணப்படுகின்ற போதும் தமிழ் மொழிமூலமான பட்டதாரிகள் நியமனம் 78 சிங்கள மொழி மூலமான பட்டதாரி நியமனங்கள் 242ம் வழங்கப்பட்டுள்ளது. இது தம்மை இன ரீதியாக ஓரங்கட்டும் அநீதியாகும்
அத்தோடு இக் கிழக்கு மாகாண சபை தமது நியமன சுற்று நிருபத்திற்கு புறம்பாக இவ் நியமனங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக சுற்று நிருபத்திற்கு முரணாக சித்தியடையாமல் குறைந்த புள்ளிகளை பெற்ற சிங்கள மொழிமூல பட்டதாரிகள் நியமனத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை தம்மை அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயற்பாடாக எண்ணத் தேன்றுகின்றதாகவும் தெரிவித்தார்.
வழங்கப்பட்ட நியமனம் தொடர்பாக தாம் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளரிடம் வினவிய போது ஆளணி வெற்றிடங்கள் இன்மையால் தாம் சிங்கள மொழி மூல பட்டதாரிகளை உள்வாங்க உள்ளதாகவும், தாம் தகவலறியும் சட்டமூலத்தினூடாக பெறப்பட்ட ஆளணி வெற்றிடங்களை மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளரிடம் காண்பித்தபோது அவை பொய்யான தகவல் என அவர் மறுத்ததாகவும் குறிப்பட்டார். எனவே ஒட்டுமொத்தமாக அரசாங்கமே தம்மை ஏமாற்றுகின்றதா என எண்ணத்தோன்றுகின்றது.
பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியின் பிரகாரம் சித்தியடையாதவர்களை உள்வாங்கியமைக்காகவும், தமிழ் மொழிமூல பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டமைக்காகவும், தமிழ் மொழி மூலமான ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் இருந்தும் அவை மறைக்கப்பட்டதற்காகவும் சட்டரீதியாக பிரபல சட்டத்தரணி ஊடாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம். இதற்கான நடவடிக்கைகளை சட்டத்தரணிகள் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம். நூர்தீன்
No comments:
Post a Comment