சிரியாவின் கவுட்டா பகுதியில் போராளிகள் வசம் சிக்கி இருந்த நகரங்கள் மற்றும் விவசாயப் பண்ணைகளை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் ராணுவம் அறிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
அந்த பகுதிகளை மீட்கவும், போராளிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்குமிடங்களை அழிக்கவும் ரஷிய நாட்டு படைகளின் துணையுடன் சிரியா ராணுவம் ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சிரியாவில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை ஒரு மாதத்துக்கு இடைக்கால போர் நிறுத்தம் செய்யும் சமரசத்தை ரஷியா உருவாக்கி தந்தது. இந்த போர் நிறுத்த நேரம் தவிர மற்ற வேளைகளில் இருதரப்பினரும் சரமாரியான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிழக்கு கவுட்டா பகுதியில் போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக கடந்த இரு நாட்களாக அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதன் விளைவாக சில நகரங்களையும், விவசாயப் பண்ணை நிலங்களையும் கைப்பற்றியுள்ளதாக சிரியா ராணுவம் இன்று அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் பல கிளர்ச்சி குழுவினர் கொல்லப்பட்டதாகவும், அவர்களது தலைமையகங்கள் மற்றும் ரகசிய குகைகள் போன்றவை அழிக்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
No comments:
Post a Comment