சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பேர் பலி

சிரியாவில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியில் போர் நிறுத்தத்தை மீறி அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் சண்டையிட்டு வந்த நிலையில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. நிறுத்தியது. இதனால், அரசுப்படையினரின் கை ஓங்கிய நிலையில், கடந்த 18-ம் தேதி முதல் அதிபர் ஆதரவு படை - ரஷ்யா இணைந்து கிழக்கு கூட்டா பகுதியில் ஆவேச தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

கிழக்கு கூட்டா பகுதியில் போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக கடந்த இருநாட்களாக அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதன் விளைவாக சில நகரங்களையும், விவசாயப் பண்ணை நிலங்களையும் கைப்பற்றியுள்ளதாக சிரியா ராணுவம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஐ.நா.சபை ஏற்பாடு செய்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் சிரியா அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 34 பேர் உயிரிழந்ததாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இதே பகுதியில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment