புதிதாக மேல் மாகாண சபை உறுப்பினராகியிருக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் திரு சந்திரசோம சரணலால் அவர்கள் அண்மையில் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அக்கட்சியானது இனவாதத்தை மக்களிடத்தில் விதைத்து வாக்குக் கேட்பதாகவும் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.
உண்மையில் திரு சரணலால் அவர்கள் அறியாது பேசுகிறாரா? அல்லது அறிந்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் வேட்புமனுப்பத்திர அறிவிப்பு கோரப்படும் நாட்களில் அத்தனகல்ல பிரதேசத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களிடம் தமது கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு கெஞ்சியது பலர் அறியாதவொன்றல்ல. அந்த நேரம் அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் இனவாதக்கட்சியாகத் தோன்றவில்லையா?
ஒரு பேச்சுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இனவாதக்கட்சிதான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஏன் இணைந்து போட்டியிடுமாறு கேட்டார். அவர்களுடன் இணைந்து போட்டியிட்டால் இனவாதத்தைத் தூண்டிப் பெறும் வாக்குகளையும் சேர்த்து அதிக ஆசனங்களை வெல்லலாம் என்று கணக்குப் போட்டாரோ தெரியவில்லை.
திரு சரணலால் அவர்களே! எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அத்தனகல்ல பிரதேச சபை வேட்பாளர் பட்டியலை எடுத்துப்பாருங்கள். மூன்று இனங்களையும் நான்கு மதங்களையும் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட திஹாரி – கட்டுவஸ்தொட இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் சிங்களப் பெண் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். உங்களது தொகுதியிலிருந்து எடுத்த உதாரணமே போதும் என்று நினைக்கிறேன்.
சிங்கள பௌத்தர்களை நூறு வீதம் கொண்ட அம்பாறை தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 36 கிளைகள் உள்ளன. எங்கு இக்கட்சியில் இனவாதம் இருக்கிறது. இந்த தகவல் பொய் என்றால் உங்களது கட்சியின் அம்பாறை மாவட்ட அமைச்சரிடம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அந்த பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதையும் ஞாபகப்படுத்துகிறேன்.
அதிகம் எழுதத்தேவையில்லை. இந்தத் தகவல்கள் உங்களது செவிக்கு எட்டும் என்று நம்புகிறேன். அது நடக்காவிட்டாலும் உங்களது பேச்சால் குழம்பிப்போன வாக்காளர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கஹட்டோவிட்ட ரிஹ்மி
No comments:
Post a Comment