கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத இந்திய பிரதமர் - மோடி மீது டிரம்ப் பாய்ச்சல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 27, 2018

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத இந்திய பிரதமர் - மோடி மீது டிரம்ப் பாய்ச்சல்

ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீதான இறக்குமதி வரியை குறைத்திருப்பதாக கூறிய இந்திய பிரதமர் அதை செயல்படுத்த தவறி விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் அனைத்து மாநில கவர்னர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:-

அமெரிக்காவில் இருந்து ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய வேண்டுமானால் 100 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டியுள்ளது.

தற்போது, நான் பிரமாதமான மனிதராக நினைக்கும் இந்திய பிரதமர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த இறக்குமதி வரியை 50 சதவீதமாக குறைத்து விட்டோம் என்று தெரிவித்தார். நானும் சரி என்றேன். ஆனால், இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நமக்கு எதுவுமே கிடைக்கவில்லை. நமக்கு 50 சதவீதம் சகாயம் செய்வதாக அவர்கள் நினைக்கிறார்கள். இது சகாயமே அல்ல.

அவர் அழகான மனிதர் (பிரதமர் மோடி பேசும் பாணியில் தனது குரலை மாற்றியபடி) இறக்குமதி வரியை 75 சதவீதமாக குறைத்தோம், இப்போது மேலும் 50 சதவீதமாக குறைத்து விட்டோம் என்று அவர் என்னிடம் கூறினார்.
நான் என்ன சொல்லட்டும்? இதை கேட்டு நான் பரவசமாகி இருப்பேன் என நீங்கள் (கவர்னர்கள்) எதிர்பார்க்கிறீர்களா? இது சரியல்ல. நாம் இதைப்போல் பல விவகாரங்களை சந்தித்து வருகிறோம்.

இந்தியாவில் இருக்கும் இருசக்கர வாகன நிறுவனங்கள் நமது நாட்டில் ஏராளமான வாகனங்களை விற்று வருகின்றன. இதில் நமக்கு கிடைப்பது பூஜ்ஜியம்தான். ஆனால், அவர்களுக்கு முன்னர் 100 சதவீதம் இறக்குமதி வரியாக கிடைத்தது. பின்னர், 75 சதவீதமாகி, தற்போது 50 சதவீதமாக நீடிக்கிறது. இது நியாயமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இறக்குமதி வரிகள் தொடர்பாக பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக குற்றம் சாட்டி இந்த மாதத்தில் இன்று இரண்டாவது முறையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment