வட்டியுடன் கூடிய கடன் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 27, 2018

வட்டியுடன் கூடிய கடன் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்

கிராமிய உழைப்பைச் சுரண்டும் அதிக வட்டியுடன் கூடிய கடன் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மாவட்ட கூட்டுறவாளர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கண்டனப் பேரணி இன்று காலை யாழில் இடம்பெற்றது. 

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி கண்டி வீதி ஊடக யாழ் மாவட்ட செயலகத்தை அடைந்து நிறைவடைந்தது பேரணியின் நிறைவில் யாழ். மாவட்ட கூட்டுறவாளர் அமைப்பினரால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
அதிகரித்துவரும் மக்களுடைய தேவைகளையும் அவற்றை இலகுவில் நிறைவேற்ற இயலாத நிலையைத் தோற்றுவித்துள்ள வேலையின்மை போதிய ஊதியமின்மை விலைவாசி உயர்வு ஆகிய பொருளாதார காரணிகளைப் பயன்படுத்தி மக்களுக்குள் ஊடுருவும் நுண் நிதிசார் எண்ணக்கருவானது உழைக்கும் மக்களைக் கடனாளிகளாக்குகின்றது.

இதனால் தற்கொலைகள் உறவுகளுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் வன்முறைகள் அதிகரிக்கின்றன. கட்டுப்பாடுகள் வரையறைகள் அற்ற மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கும் நுண்கடன் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகவும் இத்தகைய கடன் வழங்கும் திட்டங்களை மக்களுக்குப் பாதிப்பற்ற வகையில் கூட்டுறவு அமைப்புகளூடாக மேற்கொள்ள வலியுறுத்தி இப் போராட்டம் யாழ் மாவட்ட கூட்டுறவாளர் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.
இப் போராட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் பணியாளர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment