கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு பெப்ரவரி 16 வரை விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 4, 2018

கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு பெப்ரவரி 16 வரை விளக்கமறியல்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேனவுக்கு பெப்ரவரி 16 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் நேற்று (04) காலை கைது செய்யப்பட்டு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த இருவரையும் இன்றைய தினம் (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு தொடர்பான பிரதான சந்தேகநபர்களாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன், பேர்பச்சுவல் ட்ரசரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் பெயரிடப்பட்டனர். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவினால் கடந்த வெள்ளிக்கிழமை (02) இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில், எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அர்ஜூன் மஹேந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் பிரஜாவுரிமை கொண்ட அர்ஜுன் மஹேந்திரன் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார் என்பதன் காரணமாக, இது குறித்து அந்நாட்டு பொலிசாருக்கு தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அர்ஜுன் மஹேந்திரனுக்கு வெளிநாடு செல்வதற்கு எதிரான தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது. இதேவேளை, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும் தீர்மானம் கடந்த பெப்ரவரி 01 ஆம் திகதி மீண்டும் நீடிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் சட்ட மா அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை விசாரணை செய்த கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியது.

மத்திய வங்கியின் நிதி விசாரணை பிரிவின் பணிப்பாளரால் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் கீழுள்ள 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. குறித்த தீர்மானம் 30 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்ட போதிலும், அத்தீர்மானத்தை புதுப்பிக்க முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment