வவுனியா இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு வர்த்தகர்கள் கறுப்பு கொடி - News View

About Us

About Us

Breaking

Monday, January 1, 2018

வவுனியா இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு வர்த்தகர்கள் கறுப்பு கொடி

உரிய தீர்வு கிடைக்காவிடின் தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுப்போம் என வடக்கில் ஒன்றிணைந்த இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் தனித்துவத்தை இல்லாதொழிக்கும் முதலமைச்சரின் நடவடிக்கையைக் கண்டித்தும் ஐம்பது வருடங்களுக்கு மேல் பழமையான வவுனியா மத்திய பேருந்து நிலையத்தினை பறிக்கும் நோக்குடன் முன்னெடுத்திருக்கின்ற செயற்பாட்டையும் கண்டித்தும் வடக்கில் இலங்கைப் போக்குவரத்துச்சபை பேருந்துகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், பருத்தித்துறை, காரைநகர், யாழ்ப்பாணம் ஆகிய இலங்கை போக்குவரத்துச் சபையின் சாலைகள் ஊடாக மக்களுக்கான சேவையை வழங்கி வரும் பேருந்துகள் இன்று (01) சேவையில் ஈடுபடவில்லை. இவ்வாறு சேவைப்புறக்கணிப்பால் வடக்கிற்கான உள்ளுர் மற்றும் வெளியூர் சேவைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டபோதும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பின்தங்கிய பிரதேசங்களில் போக்குவரத்துகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. புத்தாண்டு தினமான இன்று (01) போக்குவரத்துக்கள் இன்மையால் பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கும் போது, தங்களுக்கான தீர்வு கிடைக்காவிடத்து குறித்த போராட்டம் தொடர்ந்து நாளையும் முன்னெடுக்கப்படுமென தெரிவித்துள்ளனர்.
கறுப்பு கொடி கட்டி வர்த்தக நிலையங்களை பூட்டிய வர்த்தகர்கள் கடந்த 53 வருடங்களாக செயற்பட்டு வரும் பழைய பேரூந்து நிலையத்தினை மூடியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்பேரூந்து நிலைய கட்டடத் தொகுதியில் உள்ள வர்த்தகர்கள் கறுப்பு கொடியினை கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

வட மாகாண முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இன்று (01) அதிகாலை 12.00 மணியளவில் பழைய பேருந்து நிலையம் வவுனியா நகரசபை செயலாளர். இ. தயாபரனால் பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழைவாயில்களும் பெரல்கள் கொண்டு பேரூந்துகள் உட்செல்வதற்கு தடை செய்யப்பட்டு பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தர்கள் வர்த்தக நிலையங்களை மூடி கறுப்பு கொடிகளை வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக தொங்க விட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக வர்த்தகர்களிடம் வினாவிய போது, "புதிய பேரூந்து நிலையத்திற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் உள்ளுர் சேவைகளை பழைய பேரூந்து நிலையத்திலிருந்தும் வெளியூர் சேவைகளை புதிய பேரூந்து நிலையத்திலிருந்து நடைமுறைப்படுத்தும் சமயத்தில் எமது வர்த்தகம் பாதிப்படையாது எனவும் அனைத்து பேரூந்துகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து செல்லும் சமயத்தில் எமது வியாபாரம் முற்றாக பாதிப்படையும் எனவும் நாங்கள் நிதி நிறுவனங்களில் பணத்தினை கடனாக பெற்று வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை வர்த்தக நிலையங்களை திறக்க மாட்டோம்" எனவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment