புத்தாண்டு காலப்பகுதியில் பதிவான திடீர் விபத்துக்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது சிறு அதிகரிப்பை காட்டுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமந்தி சமரகோன் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு புது வருடம் உதயமான நொடி முதல் நேற்று பகல் வரை பல்வேறு அனர்த்தங்கள் தொடர்பில் 512 பேர் இம்முறை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 194 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீதி விபத்துக்கள் காரணமாக 117 பேரும் வீடுகளில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்களால் 68 பேரும் தவறி, வழுக்கி விழுந்தமையால் 161 பேரும் வன்முறைகள் காரணமாக 42 பேரும், பட்டாசு கொளுத்தும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக 12 பேரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இவ்வருடம் புத்தாண்டு தின விபத்துக்களில் தீக்காயங்கள் தொடர்பிலான சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவு பயிற்சி வழங்கும் தாதி அதிகாரியான புஷ்பா ரம்யானி டி சொய்ஸா தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தீக்காய சம்பவங்கள் குறைவடைந்த போதும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் குறிப்பிடத்தக்க சிறிய அதிகரிப்பொன்றினை அவதானிக்க முடிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2017 ஆம் ஆண்டு பிறக்கும் போது ஏற்பட்ட திடீர் விபத்துக்கள் காரணமாக 479 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர் இம்முறை 512 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அது 6 வீத அதிகரிப்பு எனவும் தெரிவித்தார்.
ஊடகங்கள் ஊடாக பல தடவைகள் தெளிவுபடுத்தப்படும் போதும், இம்முறை திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயும் போது தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அந்த நிலைமைக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளமை உறுதி யாவதாக குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment