தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியாமான முக்கிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக நல்லாட்சிக்கான தேசியமுன்னணி, ஜெனீவா சிறுபாண்மை மக்களின் உரிமைகளுக்கான செயலகம் மற்றும் அதனோடு தொடர்புபட்ட இராஜதந்திரிகளிடமும், இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு என்பவற்றிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் அரசு பின்னடைவை சந்தித்துள்ளதுடன், அரசியல் கைதிகள் விடயம் மற்றும் வடக்கு, கிழக்கில் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதிலும் அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக ந.தே.மு. தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஜெனீவாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான பிரித்தானியாவின் சிரேஷ்ட ஆலோசகர் பொப் லாஸ்ட், சர்வதேச சமாதான மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் டேவிட் வெலி, ஐ.நா. மனித உரிமைகள் ஸ்தாபனத்தின் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கான அமையத்தின் விஷேட அறிக்கையாளர் அணீஸ், இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் ஜெனிவாவுக்கான தூதுவர் அயிசாட்டா கேன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மேற்குறித்த முக்கியஸ்தர்களை சந்தித்த பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பின்னடைவை சந்தித்திருக்கின்றமையானது தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் மிகப்பெரும் தோல்வியையே கண்டிருப்பதை காட்டுகிறது.
குறிப்பாக, கடந்த ஆட்சியில் நாட்டில் இனவாத சக்திகள் முன்னெடுத்துவந்த நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்திலும் தொடர்கிறது. அத்துடன், கடந்த அரசாங்கம் இதனை கட்டுப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இன்றைய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளிலும் எதுவித முன்னேற்றங்களையும் காண முடியவில்லை.
அத்துடன், வடக்கு, கிழக்கு பகுதியில் நீடிக்கும் காணிப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரிதகதியில் தீர்வை வழங்குவதில் பின்னிற்கிறது. குறிப்பாக இராணுவத்தினால் மையாங்கொண்டிருக்கும் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளை மக்களுக்கு வழங்குவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், வடக்கு கிழக்கில் விவசாயக் காணிகள் பல அரச திணைக்களங்களினால் அபகரிக்கப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன. இவ்வாறு காணிப் பிரச்சிணைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமையால் சிறுபான்மை மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது நம்பிக்கையீனம் உருவாகியுள்ளது. இது தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாகவே இருக்கிறது.
இதுதவிர, நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு நீதி வேண்டி அவர்களது உறவினர்கள் வீதிகளிலும் அரசகாரியாலயங்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித விசாரணைகளுமின்றி அவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையானது பெரும் அநீதியாக இருக்கிறது.
எனவே, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நீதமான விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இதனை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது அதிருப்தி மேலோங்கியிருக்கிறது. இவை தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது.
இதனை அரசாங்கம் சரிசெய்து கொள்ளாமையாலேயே நாட்டில் தேசிய நல்லிணக்கம் தோல்வி கண்டுள்ளது. சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் சந்தர்பங்களில் அவ்வப்போது முன்னெடுக்கப்படும் சில நடவடிக்கைகள் கண்துடைப்புகளாகவே இருக்கின்றன எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
NFGG ஊடகப் பிரிவு
No comments:
Post a Comment