ஹைதி நாட்டு ஜனாதிபதி படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமெரிக்க வைத்தியர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 13, 2021

ஹைதி நாட்டு ஜனாதிபதி படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமெரிக்க வைத்தியர் கைது

ஜனாதிபதி ஜோவனல் மோயிசை படுகொலை செய்தது 28 பேரை கொண்ட வெளிநாட்டு கூலிப்படை என்பதை ஹைதி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி. அந்த நாட்டின் ஜனாதிபதியாக  கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் ஜோவனல் மோயிஸ்.

53 வயதான இவர் கடந்த 7ஆம் திகதி தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவரது வீட்டுக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.

மேலும் இந்த பயங்கர சம்பவத்தில் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் மனைவி மார்ட்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே ஜனாதிபதி ஜோவனல் மோயிசை படுகொலை செய்தது 28 பேரை கொண்ட வெளிநாட்டு கூலிப்படை என்பதை ஹைதி போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவர்களில் 26 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்பதும், 2 பேர் ஹைதி அமெரிக்கர்கள் என்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய நடந்த அதிரடி தேடுதல் வேட்டையின் போது கூலிபடையை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 17 பேரை போலீசார் கைது செய்தனர். அதேவேளையில் கூலிப்படையை சேர்ந்த 8 பேர் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பி சென்றனர்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமெரிக்க வைத்தியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இது குறித்து ஹைதி போலீஸ் தலைமை அதிகாரி லியோன் சர்லஸ் கூறியதாவது, ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் கொலையில் தொடர்புடைய முக்கிய நபராக அறியப்படும் 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஹைதியில் பிறந்து அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் குடியேறியவர் ஆவார். வைத்தியரான இவர் அரசியல் நோக்கங்களுடன் தனி விமானம் மூலம் ஹைதி வந்துள்ளார். ஜனாதிபதி ஜோவனல் மோயிசை கைது செய்வதே தங்களின் முதல் திட்டமாக இருந்ததாகவும், பின்னர் அது மாறியதாகவும் அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். எனினும் இது பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை. இது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீஸ் அதிகாரி லியோன் சர்லஸ் கூறினார்.

இதனிடையே ஹைதியின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் நேற்றுமுன்தினம் ஹைதி சென்றனர். இவர்கள் ஹைதியின் ஆட்சித் தலைவர் என தங்களை கூறி வரும் 3 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக ஜனாதிபதியின் படுகொலையை தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் ஹைதி அரசு கோரிக்கை வைத்ததும், அதனை அமெரிக்க அரசு நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad