ஏற்கனவே திட்டமிட்ட காலவரையறைக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் - கரு ஜெயசூரிய - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

ஏற்கனவே திட்டமிட்ட காலவரையறைக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் - கரு ஜெயசூரிய

(நா.தனுஜா)

கொரோனா வைரஸின் புதிய திரிபுகள் நாட்டிற்குள் அடையாளங்காணப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதனால், ஏற்கனவே திட்டமிட்ட காலவரையறைக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அனைத்துத் துறைகளிலும் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான பொதுவான செயற்திட்டமொன்றை வகுப்பதற்கு அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, கொவிட்-19 வைரஸின் நிலைமாற்றமடைந்த புதிய திரிபுகளின் தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டிற்குள் அடையாளங்காணப்படக் கூடும். எனவே எமது நாட்டு மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில், அரசாங்கமானது ஏற்கனவே திட்டமிடப்பட்ட காலவரையறைக்குள் பொதுமக்களுக்கான தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும்.

இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். உரிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

அதேவேளை மறுபுறம் இலங்கையானது பாரியதொரு பொருளாதார, சமூக மற்றும் சூழலியல் நெருக்கடியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொதுவான செயற்திட்டமொன்றை வகுப்பதற்கு அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இதுவாகும்.

அனைத்துத் தரப்பினரும் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படும் பட்சத்தில் ஆளுந்தரப்பா? எதிர்த்தரப்பா? என்பது குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை. மாறாக அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படுவதொன்றே முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad