ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலம் நிறைவேறினால் நாட்டின் இலவசக் கல்வி பாதிப்படைந்து, கல்விக் கட்டமைப்பு முழுமையாக இராணுவமயப்படுத்தப்படும் - ஜோசப் ஸ்டாலின் - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலம் நிறைவேறினால் நாட்டின் இலவசக் கல்வி பாதிப்படைந்து, கல்விக் கட்டமைப்பு முழுமையாக இராணுவமயப்படுத்தப்படும் - ஜோசப் ஸ்டாலின்

(நா.தனுஜா)

நாமனைவரும் இப்போது முல்லைத்தீவிலுள்ள விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றோம். இந்த முகாமின் மீது வெளிநாடுகளின் விமானப் படையினால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு நாம் உயிரிழந்தால், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையிலிருப்பவர்கள் யார்? நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் தற்போது நாம் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பாரியதொரு பிரச்சினையாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்திற்கு எதிராக கடந்த வாரம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவிலுள்ள விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து நேற்றையதினம் வெளியிட்ட காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலமானது நாட்டின் இலவசக் கல்விக் கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையிலானதொரு சட்ட மூலமாகும். இச்சட்ட மூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டின் இலவசக் கல்வி பாதிப்படையும் அதேவேளை, கல்விக் கட்டமைப்பு முழுமையாக இராணுவமயப்படுத்தப்படும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழிருந்து ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, அதன் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கலாக ஓர் குழுவை நியமித்து, அதன் மூலம் கல்வியைப் பணத்திற்கு விற்பனைசெய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலத்தை அனைத்து சிவில் சமூக அமைப்புக்களும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.

இராணுவ ஆட்சி மற்றும் இராணுவத்தினரால் கல்வி வழங்கல் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் வகையிலான கட்டமைப்புக்கள் காணப்பட்ட நாடுகளின் போக்கிலேயே தற்போது எமது நாடும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த கல்வி நடவடிக்கையை இல்லாமல் செய்வதற்கு ஆலோசனை வழங்கிய கல்விக் கட்டமைப்பை எமது நாடு கொண்டுள்ளது. பாகிஸ்தான் போன்ற நாடுகள் தற்போது படிப்படியாக இராணுவமயமாக்கத்திலிருந்து விலகி வருகின்றன. எனினும் எமது நாடு படிப்படியாக இராணுவமயமாக்கலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு, தனிமைப்படுத்தல், நாட்டின் கல்விக் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்படும் நிலையேற்பட்டுள்ளது. இப்போது நாமும் விமானப்படை முகாமிலேயே இருக்கின்றோம்.

நாம் இங்கிருக்கும்போது ஏதேனும் வெளிநாடுகளின் விமானப் படையினால் இங்கு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு, நாம் உயிரிழந்தால், அதற்குப் பொறுப்புக்கூறக் கூடியவர்கள் யார்? ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்மைக் கைது செய்து, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் வற்புறுத்தலின் பேரில் நாம் இங்கு கொண்டுவரப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றோம்.

எனவே நாம் யாரின் கீழிருக்கின்றோம். நாம் பாராளுமன்றத்தின் கீழோ அல்லது நீதிமன்றத்தின் கீழோ இல்லை. மாறாக நாமனைவரும் இப்பொழுது முல்லைத்தீவிலுள்ள விமானப் படை முகாமில் வைக்கப்பட்டிருக்கின்றோம். ஆகவேதான் எமது உயிர்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்று கேட்கின்றோம்.

இது நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும். இந்நாட்டின் பிரஜைகளை வற்புறுத்தலின் பேரில் இழுத்து வந்து, இராணுவ முகாம்களில் தடுத்து வைப்பதற்குப் பொலிஸாருக்கு உரிமை இல்லை.

அதேவேளை மறுபுறம் நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் இன்றைய தினத்திலிருந்து (திங்கட்கிழமை) இணைய வழிக் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கின்றனர். ஒரேயொரு ஆசிரியர் மூலம் இணைய வழிக் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறுகின்றார். எத்தகைய வேடிக்கையான கருத்து இது?

எம்.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டபோது அமைச்சர்கள் கருத்து வெளியிட்டதைப் போன்றுதான் இப்போதும் பொறுப்பற்ற வகையிலான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

இந்நிலையில் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலம் தொடர்பான சர்ச்சைக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும். மாறாக போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கவாதிகள் மீது அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்

No comments:

Post a Comment