ஜனாதிபதியின் தந்தை டி.ஏ.ராஜபக்ஷ வந்தாலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வை இல்லாமல் செய்ய முடியாது - ஹிருணிகா - News View

About Us

About Us

Breaking

Thursday, July 22, 2021

ஜனாதிபதியின் தந்தை டி.ஏ.ராஜபக்ஷ வந்தாலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வை இல்லாமல் செய்ய முடியாது - ஹிருணிகா

(நா.தனுஜா)

தனிப்பட்ட அரசியல் நலன்களை மையப்படுத்திய அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் மீண்டும் அடுத்த 5 வருட பதவிக் காலத்திற்காகப் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் அடுத்து வரும் தேர்தல்களில் அவரோ, பசில் ராஜபக்ஷவோ மாத்திரமல்ல, அவரது தந்தை டி.ஏ.ராஜபக்ஷவே வந்தாலும் கூட, தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வை இல்லாமல் செய்ய முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி, துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் விளைவாக நீதிமன்றத் தீர்ப்பு முற்றிலும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், நாட்டின் சட்டம், பொலிஸ், நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்தும் ஜனாதிபதியின் கட்டளையை விடவும் மேலானவை அல்ல என்றால், அவை அவசியமில்லை அல்லவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியதிலிருந்து நாட்டிலுள்ள பெண்களும் சிறுவர்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் அதனை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி அண்மைக் காலத்தில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கித் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றார்கள். 

இவற்றுக்கு மத்தியில், அடுத்த பொலிஸ்மா அதிபராகும் கனவுடன் இருவர் தமது திறமைகளைப் போட்டி போட்டுக் கொண்டு ஜனாதிபதியிடம் வெளிக்காட்டி வருகின்றார்கள். அவர்கள் அப்பாவிப் பெண்களிடமும் வயது முதிர்ந்தவர்களிடமும் தமது வீரத்தைக் காண்பிக்கின்றார்கள். அவர்கள் இருவருக்கிடையிலான போட்டியினால் அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றார்.

No comments:

Post a Comment