கொவிட் சவால்களுக்கு மத்தியில் அரச ஊடக நிறுவனங்களை மேலும் பலப்படுத்தல் : குறுகிய மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு கெஹலிய பணிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

கொவிட் சவால்களுக்கு மத்தியில் அரச ஊடக நிறுவனங்களை மேலும் பலப்படுத்தல் : குறுகிய மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு கெஹலிய பணிப்பு

கொவிட்19 தொற்று சவால்களுக்கு மத்தியில் அரச ஊடக நிறுவனங்களை மேலும் பலப்படுத்தி, எதிர்பார்க்கும் இலக்கை அடைந்து கொள்ள அனைவரும் பூரண அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்பதுடன், துறைசார் அமைச்சராக தனது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

அதன் பிரகாரம் எதிர்வரும் சில வருடங்களுக்குள் அரச ஊடக நிறுவனங்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை தயாரித்து ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

வெகுஜன ஊடக அமைச்சுக்கு உரிதான நிறுவனங்களின் மதிப்பீடுகளை ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து தொலைக்காட்சிகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டியுள்ளதால் அதற்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச தொலைக்காட்சிகள் முதலிடத்தில் காணப்பட்டன. இலக்கை அடைந்து கொள்ளும் முயற்சியில் நாம் ஈடுபட்டால் அந்நிலைமைக்கு வருவதென்பது கடினமான விடயமல்ல.

எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதால் மீண்டும் நிறுவனங்களின் செயற்பாடுகளை இயல்பாக கொண்டு நடத்த முடியும். 

தேசிய தொலைக்காட்சிகளின் சில நிகழ்ச்சிகள் மிகவும் பயனுடையவை என்பதுடன், உலகளாவிய அபிமானத்தையும் அவை பெற்றுள்ளன. அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் ஆறுமாத காலத்திற்குள் உயர்தரமான நிலைக்கு வர முடியும்.

துறைசார் அமைச்சர் என்ற வகையில் எனது முழுமையான ஒத்துழைப்புகளை இதற்கு வழங்க தயாராக உள்ளேன். கொவிட்19 நெருக்கடிக்கு மத்தியில் பணியாற்றியவரும் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad