ஊடக அடக்குமுறையை மேற்கொள்ள யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை, அவ்வாறான சக்திகளுக்கு எதிராக எதிர்க்கட்சி போராட தயாராக இருக்கின்றது - சஜித் பிரேமதாச - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 13, 2021

ஊடக அடக்குமுறையை மேற்கொள்ள யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை, அவ்வாறான சக்திகளுக்கு எதிராக எதிர்க்கட்சி போராட தயாராக இருக்கின்றது - சஜித் பிரேமதாச

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஊடக அடக்குமுறையை மேற்கொள்ள யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான சக்திகளுக்கு எதிராக எதிர்க்கட்சி போராட தயாராக இருக்கின்றது. அத்துடன் ஊடகங்கள் வெளிப்படுத்தும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்பதை அரசாங்கமும் உணர்ந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் எதிர்காலத்தில் இது தொடர்பான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பாக ஆராயும் குழுவின் கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டாார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது ஊடகங்களின் கடமை. அந்த வகையில் நாட்டில் தற்போது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக தடுப்பூசி ஏற்றுவதில் இருக்கும் பிரச்சினை, விவசாயிகளுக்கு தேவையான உரம் இல்லாத பிரச்சினை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை என பல பிரச்சினைகள் மக்களுக்கு இருக்கின்றன.

இதில் சில பிரச்சினைகள் அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்கும். அதனால் ஊடகங்கள் இந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தும்போது, அது தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை.

மாறாக மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில் அவ்வாறான ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கத்துக்கோ வேறு யாருக்கும் எந்த அதிகாரம் இல்லை. ஆனால் இன்று மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கத்தில் இருக்கும் சிலர் நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தி இருந்தேன்.

ஆனால் ஊடக அமைச்சர் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் எந்த அறிவிப்பையும் மேற்கொள்ளாமல் தற்போது வேறு விடயங்களை தெரிவித்து வருகின்றார்.

மேலும் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும் ஊடகவியலாளர்களுடன் மிகவும் அன்பாகவும் அவர்களின் தோலுக்கு மேல் கைபோட்டுக் கொண்டும் ஊடக உரிமைகளை பாதுகாப்பதாகவும் தெரிவித்து வந்தது.

ஆனால் ஊடகங்களின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது ஊடகங்களை அடக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது. இது மிகவும் அருவறுக்கத்தக்க செயலாகும். எப்போதும் ஒரு கொள்கையில் இருக்க வேண்டும்.

எனவே நாட்டில் இருக்கும் எந்தவொரு ஊடக நிறுவனத்துக்கும் ஊடகவியலாளருக்கும் அடக்குமுறைகள் ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டாேம். ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கம் அதிகாரம் இல்லை.

மாறாக ஊடகங்கள்தான் தங்களுக்கான சுய கட்டுப்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து செயற்படுவோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad