இலங்கைக்கான, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி : அரசியல் கைதி ஆதித்தியனின் வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

இலங்கைக்கான, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி : அரசியல் கைதி ஆதித்தியனின் வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

(எம்.எப்.எம்.பஸீர்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரத்னத்தின் மகனான கனகரத்தினம் ஆதித்தியனுக்கு எதிராக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகளுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19, 22, 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக ஐந்து தினங்களுக்கு இந்த விசாரணைகளை நடாத்த கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படையில் அரச சாட்சிகளுக்கு குறித்த தினங்களில் மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இஸ்ஸதீன் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா முன் வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய பசீர் வலி மொஹமட்டை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பிலான சந்தேகத்தில் கனகரத்தினம் ஆதித்தியனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவ்வழக்கே எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக விசாரணை செய்யப்படவுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பசீர் வலி மொஹமட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தியதாகவும், அதில் இராணுப் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன், மேலும் பத்து பொதுமக்களுக்கு கடும் காயத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனகரத்தினம் ஆதித்தனுடன் மேலும் இருவரும் இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைதியான கனகரத்தினம் ஆதித்தியன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜராகி வருவதுடன் கடந்த தவணையின் போது அவர் முன் வைத்த வாதங்கள மேல் நீதிமன்றம் ஏற்றுக் கொன்டு வழக்கு விசாரணைகளுக்கு தொடர்ச்சியான திகதிகளை அளித்தது.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில், 'கடந்த 12 வருடங்களாக தடுப்புக் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரே அரசியல் கைதியே எனது சேவை பெறுநரான இவ்வழக்கின் பிரதிவாதியாவார்.

இவ் வழக்கில் கடந்த 12 வருடங்களாக அவர் மஹர சிறைச்சாலையில் பிரத்தியேக பகுதியில், தடுப்புக் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனது சேவை பெறுநரான இந்த பிரதிவாதிக்கு எதிராக இதற்கு முன்னர் ஒரேயொரு குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட சில வழக்குகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயளாளர் கோட்டாபய ராஜபக்ச (தற்போதைய ஜனாதிபதி) முன்னாள் இராணுத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அவ்வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

அவ்வழக்குகளிலும் நானே ஆஜராகி கணகரத்தினம் ஆதித்யன் சார்பில் ஆஜரானேன். அவ்வழக்குகளில், குறித்த ஒப்புதல் வாக்கு மூலத்தை நிராகரித்து கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி, அப்போதைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோனினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறான நிலையிலேயே எனது சேவை பெறுநர் கனகரத்தினம் ஆதித்தியனுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கு இந்நீதிமன்றில் 2019 ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

இந்த வழக்கிலும் கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக முக்கிய சான்றாக குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்று முன் வைக்கப்பட்டது. இந்த ஒப்புதல் வாக்கு மூலமும் இந்த நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த வழக்கை முன் கொண்டு செல்ல சட்டமா அதிபர் 65 சாட்சியாளர்களை அரச சாட்சியாக பட்டியலிட்டு சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பும்படி இந்த நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் இந்த நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட பின்னர் 2019 ஆம் ஆண்டிலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த வழக்கின் மேலதிக விசாரணைக்கு பல தவணை வழங்கப்பட்டதெனினும் சாட்சிகள் நீதிமன்றில் சமூகமளிக்காமையாலும் கடந்த வருடத்திலிருந்து கொவிட்-19 காரணமாகவும் வழக்கு தொடர்ச்சியாக பிற்போடப்பட்டே வந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் 12 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் கீழ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்காப்பட்டிருக்கும் ஒரே ஒரு அரசியல் கைதி கனகரத்தினம் ஆதித்தியனவார்.

கடந்த 2009 மே 13 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் அது முதல் தடுப்புக் காவல் உத்தரவின் கீழேயே வைக்கப்பட்டுள்ளார். எனவே இந்த வழக்கினை விசாரணைக்காக திகதியிடும்படி வேண்டுகிறேன்.' என தெரிவித்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் இஸ்ஸதீன் அரச சாட்சிகளுக்கு அறிவித்தல் அனுப்ப நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டு மேலதிக விசாரணகளை இம்மாதம் 19, 22, 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளுக்கு ஒத்தி வைத்தார்.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் பல வழக்குகளையும் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பிலும் நீதிபதி மொஹம்மட் இஸ்ஸதீன் திறந்த மன்றில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment