மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதை விடுத்து அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளது : தடுப்பூசி கொள்வனவை ஏனைய நாடுகள் ஆரம்பித்தபோது நம் நாடு ஆற்றில் பானையை கவிழ்த்துக் கொட்டி, மூட நம்பிக்கையின் பின்னால் சென்றது - ஜே.சி.அலவத்துவல - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 7, 2021

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதை விடுத்து அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளது : தடுப்பூசி கொள்வனவை ஏனைய நாடுகள் ஆரம்பித்தபோது நம் நாடு ஆற்றில் பானையை கவிழ்த்துக் கொட்டி, மூட நம்பிக்கையின் பின்னால் சென்றது - ஜே.சி.அலவத்துவல

(நா.தனுஜா)

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆட்சிப் பொறுப்பைத் தம்மிடம் வழங்குமாறு கூறினார்கள். அதன்படி 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்று கூறினார்கள். அதனையும் மக்கள் பெற்றுக் கொடுத்தார்கள். பின்னர் 19 ஆவது அரசியலமைப்பத் திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றுகூறி, அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்கள். ஆனால் இவற்றின் மூலம் அவர்கள் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. எனவே நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இப்போது அதன் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வு கண்டுகொண்டிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகியிருக்கின்றது. அவ்வாறான நெருக்கடிக்கு மத்தியில் சுகாதாரத்துறை ஊழியர்களில் ஒரு பிரிவினர் தொழிற்சங்க நடவடிக்கையை முடிவிற்குக் கொண்டுவரும்போது, மற்றொரு பிரிவினர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கின்றார்கள்.

சுகாதாரத் துறையைப் பொறுத்த வரையில், மிக மோசமான கொரோனா வைரஸ் பரவலின்போது வைத்தியர்கள் முதல் சுகாதாரத் துறை சிற்றூழியர்கள் வரை அனைவரும் மக்களுக்கு முக்கிய சேவையை வழங்கி வருகின்றார்கள். ஆகவே அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை செவிமடுத்து, அவற்றுக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

ஆனால் அரசாங்கம் குறைந்தபட்சம் சுகாதாரப் பணியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்குக்கூட முன்வரவில்லை. பல்வேறு தொழிற்சங்கங்களைக் கொண்ட சுகாதாரத் துறையில் ஒரேயொரு தொழிற்சங்கத்துடன் மாத்திரம் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதை அண்மையில் அவதானிக்க முடிந்தது. 

எனவே உண்மையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றதா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில் அரசாங்கம் தமக்குச் சாதகமாகச் செயற்படக் கூடிய தொழிற்சங்கங்களுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்தி, இவ்விடயத்தையும் முழுமையாக அரசியல் மயப்படுத்தியிருக்கிறது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அண்மையில் சில வைத்தியசாலைகளில் மாத்திரம் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்ததன் விளைவாக, சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் மக்கள் முண்டியடித்துக் கொண்டு மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்தார்கள்.

சுகாதாரப் பணியாளர்கள் மாத்திரமன்றி நாட்டு மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. அனைத்துத் துறைகளிலும் அரசாங்கம் கண்டிருக்கும் தோல்வியானது மக்களின்மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

உள்நாட்டு உற்பத்திகளையும் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்பதாகக்கூறி ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கத்தினால் உரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களால், இப்போது உள்நாட்டு விவசாயம் பாரிய நெருக்கடிக்கும் வீழ்ச்சிக்கும் முகங்கொடுத்திருக்கின்றது. 

விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கை என்பன வீழ்ச்சியடையும்போது அரிசி உள்ளிட்டவற்றின் சந்தை நிரம்பலிலும் வீழ்ச்சி ஏற்படும். எனவே பொருட்களின் விலைகளில் பெருமளவான அதிகரிப்பு ஏற்படும். மறுபுறம் விவசாயிகளின் வருமானம் வீழ்ச்சியடையும்.

சாதாரண பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கமாட்டோம் என்றும் தாம் மேற்கொண்ட தீர்மானங்களை ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டோம் என்றும் அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டின் பிரதிபலனை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் தீவிரமடைவதற்கும் அரசாங்கத்தின் இவ்வாறான நிலைப்பாடுகளே பிரதான காரணமாகும். ஏனெனில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி வழங்கல் மாத்திரமேயாகும் என்று நாம் தொடர்ச்சியாகக் கூறி வந்தோம். அதனை ஏற்றுக் கொண்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்க வேண்டும்.

தடுப்பூசிகளின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டபோது, அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஏனைய நாடுகள் ஆரம்பித்திருந்தன. எனினும் எமது நாடு என்ன செய்தது? ஆற்றில் பானையொன்றைக் கவிழ்த்துக் கொட்டி, மூட நம்பிக்கைகளில் பின்னால் சென்றுகொண்டிருந்தது. 

அரசாங்கத்தின் செயற்பாடுகளின் விளைவாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் தாமதமேற்பட்டது. அஸ்ட்ராசெனிகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட சுமார் 6,00,000 பேர் இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றின் காரணமாக அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்று அனைவரும் கூறுகின்றார்கள்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முதலில் ஆட்சிப் பொறுப்பைத் தம்மிடம் வழங்குமாறு கூறினார்கள். அதற்கமைவாக 69 இலட்சம் வாக்குகள் மூலம் ஜனாதிபதி தெரிவானார். அதன் பின்னர் தமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்று கூறினார்கள். அதனையும் மக்கள் பெற்றுக் கொடுத்தார்கள். பின்னர் 19 ஆவது அரசியலமைப்பத் திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறினார்கள். அதனூடாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி, அனைத்து நிறைவேற்றதிகாரங்களையும் ஜனாதிபதி பெற்றுக் கொண்டார்.

ஆனால் இவையனைத்தின் ஊடாகவும் அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்? எதனையும் செய்யவில்லை. ஆனால் தமக்கு நெருக்கமானவர்களை நீதமன்ற வழக்கு விசாரணைகளிலிருந்து விடுதலை செய்வது உள்ளடங்கலாக தமக்கு வேண்டிய அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாகக்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இப்போது அதன் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அரசாங்கம் கூறி வந்தது. இது குறித்து தற்போதுவரை அரசாங்கத்தினால் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன? மேலும் செலெந்திவா கம்பனியின் ஊடாக நாட்டின் முக்கிய வளங்களை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வைத்திய நிபுணர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வரும் டெல்டா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சீரமைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன? பசில் ராஜபக்ஷ வருகையின் மூலம் இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு வழங்கப்படும் என்று இப்போது அரசாங்கம் கூறி வருகின்றது.

எனவே முழுமையாகப் பார்க்குமிடத்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதை விடுத்து, தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதை மாத்திரமே அடிப்படை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad