உலக நாடுகளில் வாழ்ந்து வரும் உய்கர் முஸ்லிம்களை நாடு கடத்துமாறு வற்புறுத்தும் சீனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

உலக நாடுகளில் வாழ்ந்து வரும் உய்கர் முஸ்லிம்களை நாடு கடத்துமாறு வற்புறுத்தும் சீனா

உலக நாடுகளில் வாழ்ந்து வரும் சீன உய்கர் முஸ்லிம்களைப் பயமுறுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணியும் நாடுகள் உய்கர் முஸ்லிம்களை சீனாவுக்கு திருப்பி அனுப்புவதாகவும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உய்கர் மனித உரிமை திட்டம், ஒக்ஸஸ் சொசைட்டி உட்பட சில சமூக நிறுவனங்களின் உதவியுடன் வொய்ஸ் ஒப் அமெரிக்கா தயாரித்துள்ள இந்த அறிக்கையில் பாகிஸ்தான், எகிப்து, துருக்கி, சவூதி அரேபியா போன்ற நாடுகள் சீனாவின் அழுத்தங்களுக்கு அடிபணிவதாகவும் 1997ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு 14 உய்கர்களை சீனாவுக்கு நாடு கடத்தியதாகவும் அவர்கள் அனைவரும் சீனாவில் மரண தண்டனைக்கு ஆளானார்கள் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில நாடுகளில் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கக்கூடிய போதுமான சட்டங்கள் இல்லாமை அல்லது வலிமையற்ற சட்டங்கள் காணப்படுவது மற்றும் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமை என்பன சீனாவின் உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான தலையீடுகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன என்று ‘ஓடுவதற்கு வேறு இடமில்லை உய்கர்களுக்கு எதிரான சீனாவின் உலகளாவிய அடக்குமுறை’ என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1997 முதல் 2017 வரையில் 23 நாடுகளைச் சேர்ந்த 851 உய்கர் முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட்டு சீனாவில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் 2017 முதல் பீஜிங் தீவிரம் காட்டியதன் விளைவாக 695 பேர் 15 நாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

2017ம் ஆண்டு சீனா கேட்டுக்கொண்டதன் பேரில் எகிப்திய பொலிஸ் பல உய்கர் மாணவர்களை தடுத்து வைத்தது. சிலர் துருக்கிக்கு தப்பி ஓடினர். சிறை பிடிக்கப்பட்டவர்கள் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பொருளாதார ரீதியாக நலிவுற்ற நாடுகள் சீன உதவிகளுக்காக பீஜிங்கின் தேவைகளை நிறைவேற்றுவதாகவும், பொருளாதார ரீதியாக பலன்களை சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ள உய்கர் முஸ்லிம்களை அந்நாடுகள் துரும்புச்சீட்டாக பயன்படுத்த முனைவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment