வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் : பழனி திகாம்பரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 22, 2021

வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் : பழனி திகாம்பரம்

மலையகத்திலிருந்து பணத்துக்கு ஆசைப்பட்டு சிறார்களை வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டியுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஹற்றனில் நேற்று (21.07.2021) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த சிறுமி தீ மூட்டிக் கொண்டாரா, அல்லது தீ வைத்து கொளுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும். 

இச்சம்பவம் தொடர்பில் அடி முதல் முடிவரை அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னணியில் செயற்பட்ட அனைவருக்கும் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். 

இதற்கான நீதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே, நீதி விசாரணை உரிய வகையில் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றோம். அனைவருக்கும் கஷ்டம் உள்ளது.

அதற்காக சிறார்களை வேலைக்கு அனுப்புவதை அனுமதிக்க முடியாது. நாட்டில் வேறு பகுதிகளில் அவ்வாறு நடைபெறுவதில்லை. மலையகத்தில் இருந்துதான் சிறார்கள் இவ்வாறு வீட்டு வேலைக்கு செல்கின்றனர். இதன் பின்னணியில் செயற்படும் தரகர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். சிறார்களை வேலைக்கு அழைத்து செல்வது ஆட்கடத்தலுக்கு ஒப்பான செயலாகும்.

(ஹற்றன் விசேட நிருபர்கள்)

No comments:

Post a Comment