மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளின் பின்னடைவுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் - மனுஷ நாணயக்கார - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளின் பின்னடைவுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் - மனுஷ நாணயக்கார

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளின் விளைவாக, நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களால் இதுவரை காலமும் இணைய வழியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவந்த கற்பித்தல் நடவடிக்கைகள் நேற்றைய தினத்திலிருந்து மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாரிய பின்னடைவைச் சந்திக்கவுள்ள நிலையில், அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் எதிர்கால சந்ததியைக் கருத்திற் கொண்டு இலவசக் கல்விக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் பின்னரும் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் பிள்ளைகள் உட்பட அனைத்துப் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் போராடிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கையை எடுப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்.

குறிப்பாக இவற்றுக்கு எதிராக நாம் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்யும்போது இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கியவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையில்லை. மாறாக அந்நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளே ஆஜராக வேண்டும் என்பதை மனதிலிருத்திக் கொண்டு செயற்பட வேண்டும்.

இலவசக் கல்விக் கட்டமைப்பு தனியார் மயப்படுத்தப்படுவதற்கும் இராணுவமயப்படுத்தப்படுவதற்கும் எதிராகப் போராடுபவர்கள் புத்திசாலிகள் அல்ல என்ற கருத்து வெளிப்படும் விதத்தில் 'இவ்வேளையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் புத்திசாலிகள் அல்ல' என்று பாராளுமன்றத்தில் கதிரையைத் தூக்கியெறிந்த புத்திசாலியான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகின்றார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்களும் இணைய வழி மூலமான கற்பித்தல் நடவடிக்கைகளை நேற்றைய தினத்திலிருந்து இடைநிறுத்தியிருக்கின்றார்கள். இதன் காரணமாக மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பிற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாட்டின் முக்கிய பதவிகளுக்கும் அமைச்சரவையில் முக்கிய பதவிகளுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வரும் போக்கை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் கருத்திற்கேற்ப இணைய வழிக் கல்வி நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அவசியமான ஒருவரும் அதே குடும்பத்திலிருந்து நியமிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அந்தளவிற்கு நாடு மிகவும் மோசமான பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad