நேபாளத்தின் புதிய பிரதமராக எதிர்கட்சித் தலைவர் - நாடாளுமன்றத்தை ஏழு நாட்களுக்குள் கூட்டுமாறும் நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

நேபாளத்தின் புதிய பிரதமராக எதிர்கட்சித் தலைவர் - நாடாளுமன்றத்தை ஏழு நாட்களுக்குள் கூட்டுமாறும் நீதிமன்றம் உத்தரவு

நேபாள நாடாளுமன்றத்தை ஏழு நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், மேலும், அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஷெர் பகதூர் தியூபாவை நாட்டின் அடுத்த பிரதமராக நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் நேபாள குடியரசு தலைவரை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. 

இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில், நேபாளத்தில் நீடித்து வரும் அரசியல் ஸ்திரமின்மையை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டின் மக்களவையை இரண்டாவது முறையாக பிரதமர் ஒலி யோசனைப்படி கலைத்த குடியரசு தலைவரின் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையை கலைக்கும் பிரதமரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், ஏழு நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை நேபாள எதிர்கட்சிகள் வரவேற்றுள்ளன. 

அதே சமயம், பிரதமர் ஓலியின் கட்சி பேசும்போது, "ஆட்சி முறைக்கும் நீதித்துறைக்கும் இடையிலான அரசியலமைப்பின் மாண்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மீறப்பட்டுள்ளது," என்று தெரிவித்தது.

நேபாள நாடாளுமன்றத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் ஓலி கலைத்து நடவடிக்கை எடுத்தார்.

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கட்சியையும், ஆட்சியையும் ஒருதலைபட்சமாக நடத்துவதாகவும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2018ஆம் ஆண்டு நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டையும் இணைத்த பிறகு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேபி. ஷர்மா ஒலி.

இந்த ஒருங்கிணைந்த கட்சியின் துணைத் தலைவரானார், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசாண்டா என்று அறியப்படும் புஷ்ப கமல் தஹால். இருப்பினும் கட்சிக்குள் அதிகார சண்டை மூண்டது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவுடனான எல்லை பிரச்சினையின்போது கட்சியின் மூத்த தலைவர்களான புஷ்ப் கமல் தஹல் மற்றும் ஜலநாத் கானல் ஆகியோர் பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதே சமயம், பிரதமர் கேபி. ஷர்மா ஒலி குடியரசுத் தலைவரிடம் அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று கோரினார்.

குடியரசுத் தலைவர் அவசர சட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின் கட்சியில் சர்ச்சை வெடித்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் அந்த அவசரச் சட்டத்தை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் கோரினர்.

உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட குடியரசுத் தலைவரை கோரினர். மேலும் கேபி. ஒலி பிரதமர் பதவியிலிருந்தும், கட்சி தலைமை பொறுப்பிலிருந்தும் விலக வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இதற்குப் பின் பிரதமர் மீது அழுத்தம் கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதி கோரிக்கையை திரும்ப பெறுவது என்றும் அதற்கு பதிலாக பிரதமர் அவசரச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

இருப்பினும் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராமல், நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் முன்வைத்த யோசனையை ஏற்று நாடாளுமன்றம் கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது.

No comments:

Post a Comment