முத்துராஜவல பாதுகாக்கப்பட்ட ஈர வலய சரணாலயம் : மனுவை பரிசீலிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

முத்துராஜவல பாதுகாக்கப்பட்ட ஈர வலய சரணாலயம் : மனுவை பரிசீலிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்

(எம்.எப்.எம்.பஸீர்)

முத்துராஜவல பாதுகாக்கப்பட்ட ஈர வலய சரணாலயத்தில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் சட்ட விரோத நிர்மாணப் பணிகள், சதுப்பு நிலங்களை நிரப்பும் பணிகளை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை கோரும் மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி பரிசீலிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இதற்கான அறிவித்தலை பிறப்பித்தது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பிலும், சுற்றுச் சூழல் நீதிக்கான மையத்தின் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை ( ரிட்) மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த அறிவித்தலை பிறப்பித்தது.

இவ்விரு மனுக்களினதும் பிரதிவாதிகளாக மத்திய சுற்றாடல் அதிகார சபை, சுற்றாடல் அமைச்சர், வன ஜீவராசிகள் திணைக்களம், பொலிஸ் மா அதிபர், வத்தளை, ஜா எல பிரதேச செயலர்கள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

துறைமுக நகரத்துக்கான அதிவேக பாதை உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான முத்துராஜவல சரணாலயத்தின் நிலம் நிரப்பட்டு அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெருவதாக மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைவிட ஜா எல பிரதேச செயலகத்துக்குட்பட்ட வாவல கிராம சேவகர் பிரிவின் கீழ் வரும் முத்துராஜவல பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தின் 50 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் குறித்த மனுவில் விபரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த மனு தொடர்பில் எதிர்வரும் 26 அம் திகதி பரிசீலிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad