பாடசாலைகளுக்கு வெளிக்கள ஊழியர்கள் சமூகமளிக்க மாட்டார்கள் - கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியது ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

பாடசாலைகளுக்கு வெளிக்கள ஊழியர்கள் சமூகமளிக்க மாட்டார்கள் - கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியது ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் பணிபுரியும் வெளிக்கள ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதற்கு கல்வியமைச்சினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், நாளைய தினத்திலிருந்து பாடசாலை வெளிக்கள ஊழியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என்றும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

பாடசாலைகளின் வெளிக்கள ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படாமை தொடர்பில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச் செயலாளர் தம்மிக முணசிங்கவினால் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, பாடசாலைகளின் வெளிக்கள ஊழியர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படாமை தொடர்பில் நாம் கடுமையான கண்டனத்தை வெளியிடுகின்றோம். குறிப்பாக கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படுவதன் நோக்கம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும் அதனால் ஏற்படும் தீவிர பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்வதற்காகவுமேயாகும்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பணியாற்றும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத் தரப்பினருக்கு கொவிட்-19 தடுப்பூசியை வழங்கிவிட்டு, வெளிக்கள ஊழியர்களுக்கு மாத்திரம் தடுப்பூசியை வழங்காமல் இருப்பதன் விளைவாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த முடியாத நிலையேற்படும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் பாடசாலைகளின் வெளிக்கள ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

இது இவ்வாறிருக்கையில் சில பாடசாலைகளின் அதிபர்கள், அப்பாடசாலைகளில் பணிபுரியும் வெளிக்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்.

எனவே இவ்வனைத்துக் காரணிகளையும் கருத்திற் கொண்டு பாடசாலைகளின் வெளிக்கள ஊழியர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அவ்வாறு தடுப்பூசி வழங்கப்படாத பட்சத்தில் இம்மாதம் 13 ஆம் திகதியிலிருந்து பாடசாலை வெளிக்கள ஊழியர்கள் தமக்குரிய பணியை நிறைவேற்றுவதற்காகப் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad