ஹிங்குராங்கொட ஹத்தமன கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்கு அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் அமைப்பு தீர்வை பெற்றுக் கொடுத்தது - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

ஹிங்குராங்கொட ஹத்தமன கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்கு அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் அமைப்பு தீர்வை பெற்றுக் கொடுத்தது

ஐ.எம்.மிதுன் கான்

பொலன்னறுவை ஹிங்குராங்கொட ஹத்தமன கிராமம் என்பது முஸ்லிம் மற்றும் சிங்கள சகோதரர்கள் ஒருவருக்கொருவர் உதவியாய் வாழும் ஒற்றுமைமிக்க கிராமமாகும். இக்கிராமத்தில் மிக நீண்ட நாட்களாக நிலவி வந்த சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் அமைப்பு தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளது.

இக்கிராமத்தில் நிலவி வந்த குறித்த பிரச்சினை தொடர்பில் ஹத்தமன பௌத்த விஹாரயின் பிரதான பிக்கு அவர்கள் அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷேஹ் நூறுல்லாஹ் (நளீமி) அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.

இதையடுத்து அல் ஹிமா இஸ்லாமிக் சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷேஹ் நூறுல்லாஹ் (நளீமி) அவர்கள் குவைட் நாட்டின் இஸ்லாமிக் கெயார் அமைப்பின் ஊடாக நிதியினை பெற்று குறித்த கிராமத்தில் வசிக்கும் 150 இற்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார்.
2021.07.12 அன்று குறித்த சுத்திகரிப்பு இயந்திரம் ஹத்தமன பிரதான பௌத்த விகாரையில் உத்தியோகபூர்மாக பிரதேசவாசிகள் பாவனைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் மூலம் இரு சமூகமும் வாழும் குறித்த கிராமத்தில் இதுபோன்ற பெரும் சேவைகள் நடைபெறுவதானது இரு சமூகத்திற்குமிடையில் சிறந்தவொரு ஒற்றுமையினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என ஹத்தமன பௌத்த விஹாரயின் பிரதான பிக்கு தெரிவித்தார்.

அத்தோடு சுத்தமான குடிநீர் இல்லாமல் இவ்வளவு காலமும் சிறுநீரக நோய் போன்ற பல இன்னல்களால் பாதிக்கப்பட்ட எமது கிராம மக்கள் இனி பயமில்லாமல் நீர் அருந்துவார்கள் என்றும் இக்குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை எமது கிராமத்திற்கு பெற்றுத்தந்த அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷேஹ் நூறுல்லாஹ் (நளீமி) அவர்களுக்கு தமது நன்றியினையும் ஊர் மக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

அல் ஹிமா இஸ்லாமிக் சேவைகள் அமைப்பானது இலங்கையின் பல பாகங்களிலும் இவ்வாறான பல சேவைகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad