வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பஷில் நேரடியாக ஒத்துழைப்பு வழங்குவார் : அருந்திக்க பெர்னாண்டோ - News View

Breaking

Post Top Ad

Saturday, July 3, 2021

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பஷில் நேரடியாக ஒத்துழைப்பு வழங்குவார் : அருந்திக்க பெர்னாண்டோ

(செ.தேன்மொழி)

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக பஷில் ராஜபக்ஷ நேரடியாக ஒத்துழைப்பு வழங்குவார் என எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்ட பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் தென்னங்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. 

ஐந்து பிரதான நோக்கங்களை முன்னிலைப்படுத்தி நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த செயற்திட்டத்தின் போது, 4 மில்லியன் தென்னங் கன்றுகளை பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. 

விதை தேங்காய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் காபனேற்றப்பட்ட உரத்தை பன்படுத்தி தென்னை பயிர்ச்செய்கையை முன்னேற்றுவதும் இதன் பிரதான நோக்கமாகும்.

ஜனாதிபதி பதவியேற்ற காலம் முதல் இதுவரையில், தேசிய தொழிற்துறையை முன்னேற்றுவது, தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி தேவையற்ற செலவுகளை குறைப்பது மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் பணத்தின் அளவை குறைத்து, அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ளும் வழியை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததுடன், அதற்கான செயற்பாடுகளையும் ஆரம்பித்திருந்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. பணம் ஈட்டக்கூடிய தொழிற்துறைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டும். வைரஸ் பரவல் காரணமாக அந்த செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. 

2005 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது, யுத்தத்தை நிறைவு செய்யும் செயற்பாடுகளின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார். அதன்போது பொருளாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவே அதற்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார்.

'கிராம அபிவிருத்தி ', 'தேசத்திற்கு மகுடம்' போன்ற வேலைத்திட்டங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பசில் ராஜபக்ஷவே பெரும் சக்தியாக செயற்பட்டிருந்தார். இன்றும் கூட ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கை திட்டங்களை செயற்படுத்தவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் வெளிகளத்திலிருந்து மாபெரும் சக்தியாக செயற்பட்டு வருகின்றார். 

அதற்கமைய நாட்டின் பொருளாதார நிலைமையை முன்னேற்றுவதற்காக அவர் பெரும் சக்தியாக செயற்படுவார் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad