நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சுகாதார வழிமுறைகளை பற்றி தற்போது சிந்திப்பது நல்லது - வைத்தியர் யமுனாநந்தா - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சுகாதார வழிமுறைகளை பற்றி தற்போது சிந்திப்பது நல்லது - வைத்தியர் யமுனாநந்தா

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் தொடங்க இருப்பதனால் அதனைச் சிறப்பாக நிகழ்த்தி முடிப்பதற்கு சுகாதார வழிமுறைகளை பற்றி தற்போது சிந்திப்பது நல்லது என வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்ககையில், “நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் தொடங்க இருப்பதனால் அதனைச் சிறப்பாக நிகழ்த்தி முடிப்பதற்கு சுகாதார வழிமுறைகளை பற்றி தற்போது சிந்திப்பது நல்லது.

சில மாதங்களுக்கு முன் நயினாதீவு வெசாக் கொண்டாட்டம் நிகழ்த்துவதற்கு முன்னேற்பாடாக சுகாதாரப் பகுதியினரால் நயினாதீவுக் கிராமத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதேபோல் நல்லூர் உற்சவத்தையும் கருதலாம். எதிர்வரும் வாரங்களில் கொரோனாத் தொற்றின் தீவிரம் குறைந்தாலும் நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலயச் சூழலில் வாழும் பொதுமக்களுக்கு குறிப்பாக 30 வயதிற்கு மேல் கொரோனாத் தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொடுத்தால் சிறப்பு.

மேலும் ஆலய உற்சவத்தில் யாழ் மாநகர சபைக்கு வருமானத்தினை ஈட்டித்தரும் சிறு வியாபாரிகளுக்கும் விசேடமாகத் தடுப்பூசியினை தற்போது வழங்க முனைவது நல்லது.

கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளில் வெறுமனை மருந்துவக் கண்ணோட்டத்துடன் அல்லாது ஆன்மீக, கலாச்சார விழுமயங்களை பேணுதலும் பொருளாதார மேன்பாடு, நுண்ணிதிய விருத்தி என்பவற்றையும் கருதுதல் அவசியம்.

சமூக இடைவெளி பேணிய புதிய ஒழுங்கில் சமூகத்தினை மீள இயங்க வைத்தல் மிகவும் அவசியமானது. இந்த வகையில் எதிர்வரும் நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தினையும் சிறப்பாக நிகழ்த்துவதற்கு சுகாதாரப்பிரிவின் சிறந்த திட்டமிடல் அவசியமாகும்.

யாழ். குடாநாட்டிற்கு மேலும் நூறாயிரம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படின் கொரோனா தொற்றின் பரம்பலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

கொரோனா தடுப்பு மருந்துகள் கொரோனா நோயின் தீவிரத்தன்மையினை குறைப்பதில் 90 சதவீதம் உறுதி உடையவையாகும். இதனால் டெல்டா திரிவின் பாதிப்பினையும் கட்டுப்படுத்தலாம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad