தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது, ஆனால் இப்போது நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் எனக் கூற முடியாது என்கிறார் வைத்தியர் ஹேமந்த - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது, ஆனால் இப்போது நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் எனக் கூற முடியாது என்கிறார் வைத்தியர் ஹேமந்த

(ஆர்.யசி)

கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதால் நாட்டில் வைரஸ் தொற்று பரவலும் குறைவடைந்துள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. ஆகவே சுகாதார கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்துகின்றது என பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொவிட் நிலைமைகள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது, ஆனால் இப்போது நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்றோ அல்லது நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றோ கூற முடியாது.

இப்போது நாளாந்தம் 1500 க்கு சற்று அதிகமான நோயாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும், ஆரம்பத்தில் நாம் இருந்த நிலைக்கு வந்தால் மட்டுமே நிலைமைகள் ஆரோக்கியமாக உள்ளதென கூற முடியும்.

மேலும் நாட்டில் பி.சி.ஆர் எடுக்கும் வேளையில் பல நெருக்கடிகளை சந்தித்தோம். தொழிற்சங்கங்கள் போரட்டங்களை முன்னெடுத்தனர். அதேபோல் தரவுகளை முறையாக முன்னெடுக்க முடியாது போனது.

எவ்வாறு இருப்பினும் தற்போது கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதால் நாட்டில் வைரஸ் தொற்று பரவலும் குறைவடைந்துள்ளது என்பது மறுபக்கம் வெளிப்படுகின்றது.

எனவே இப்போது நாம் முன்னெடுக்கும் சுகாதார கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் வெற்றியளித்து வருகின்றது என்பதையும் நாம் கூறிக் கொள்ள வேண்டும்.

ஆனால் இப்போது வைரஸ் தொற்று குறைகின்றது என்பதற்காக மக்கள் பொறுப்பில்லாது செயற்பட்டால் மீண்டும் தொற்று அதிகரிக்கும். எனவே மக்களின் பொறுப்பான செயற்பாடுகளில்தான் சகலதும் தங்கியுள்ளது.

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அதனால்தான் எம்மால் பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் நிச்சயமாக நெருக்கடி நிலைமைகளில் இருந்து தப்பிக்க முடியும். அதேபோல் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம். அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி ஏற்றி வருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad