ஆசிரியர்களுக்கு விரைவாக தடுப்பூசியை ஏற்றி பாடசாலைகளை ஆரம்பித்தற்கே முயற்சிக்கின்றாேம் : 43 இலட்சம் மாணவர்களில் 35 இலட்சம் பேர் எந்த பிரச்சினையும் இல்லாமல் கல்வியை தொடர்கின்றனர் - சுசில் பிரேம்ஜயந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

ஆசிரியர்களுக்கு விரைவாக தடுப்பூசியை ஏற்றி பாடசாலைகளை ஆரம்பித்தற்கே முயற்சிக்கின்றாேம் : 43 இலட்சம் மாணவர்களில் 35 இலட்சம் பேர் எந்த பிரச்சினையும் இல்லாமல் கல்வியை தொடர்கின்றனர் - சுசில் பிரேம்ஜயந்த

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஆசிரியர்களுக்கு விரைவாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு பாடசாலைகளை ஆரம்பித்தற்கே முயற்சிக்கின்றாேம். அத்துடன் 43 இலட்சம் மாணவர்களில் 35 இலட்சம் மாணவர்கள் இணையவழி முறையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் கல்வியை தொடர்ந்து வருகின்றனர் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவரால் கேட்கப்பட்ட, இணையவழி கல்வி நடவடிக்கை, ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மற்றும் பரீட்சைகளை நடத்துவது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தடைப்படுவதை தவிர்க்கும் வகையில் இணையவழி அடிப்படையிலும் தொலைக்காட்சி நேரலையிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் இருக்கும் 43 இலட்சம் மாணவர்களில் 35 இலட்சம் மாணவர்கள் இணையவழி கல்வியை எந்த பிரச்சினையும் இல்லாமல் பெற்று வருகின்றனர். இணையவழி வசதி இல்லாத மாணவர்களை இனம் கண்டு அந்த மாணவர்களை அந்த பிரதேசங்களில் டிஜிட்டல் மத்திய நிலையம் ஒன்றை அமைத்து அங்கு வரவழைக்கச் செய்து பாடங்களை நடத்த நடவடிக்கை நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதற்காக நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்தி 96 மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

மேலும் கொவிட் பிரச்சினை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என தெரியாது. அதனால் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை விரைவாக மேற்கொண்டு விரைவாக பாடசாலைகளை ஆரம்பிக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம். அதன் ஆரம்ப நடவடிக்கையாக இன்று (நேற்று) தேசிய கல்வி நிலையத்தில் 412 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. இதன்போது முன்னணி பாடசாலை அதிபர்கள், விடய பணிப்பாளர்கள், தேசிய கல்வி பணிப்பாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்த கட்டமாக தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை தயாரித்து வருகின்றோம்.

அத்துடன் மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளை இணையவழி முறையில் நடத்துவது சாத்தியமில்லை. பல்கலைக்கழங்களில் இணையவழியில் பரீட்சைகள் இடம்பெறுகின்றன. என்றாலும் இணையவழி மற்றும் தொலைகாட்சி ஊடாக மேற்கொள்ளப்படும் கல்வி நூறுவீதம் சாத்தியம் என தெரிவிக்க முடியாது. அதனால் விரைவாக பாடசாலைகளை ஆம்பிக்க முடியுமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுகையில், 35 இலட்சம் மாணவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இணையவழி கல்வியை தொடர்வதாக தெரிவிப்பது பொய்யாகும். அதில் எந்த உண்மையும் இல்லை. அத்துடன் உலக வங்கியினால் கிடைக்கப் பெற்ற 98 கோடி ரூபா, ஒரு வருடமாக எந்த பிரயோசனமும் பெற்றுக் கொள்ளாமல் வைக்கப்பட்டிருக்கின்றது. 

அதேபோன்று 43 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை இதுவரை மேற்கொள்ளாமல் அரசாங்கம் தங்களுக்கு தேவையானவர்களுக்கே தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது.

அத்துடன் உயர்தர பரீட்சை உட்பட ஏனைய பரீட்சைகளை நடத்துவதற்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பரீட்சைகளை நடத்துவதற்கு அந்த மாணவர்களுக்கு அவர்களுடைய பாடத்திட்டங்கள் இதுவரை பூரணப்படுத்தாமல் இருக்கின்றன. அவ்வாறான நிலையில் எவ்வாறு பரீட்சை நடத்துவது என கேட்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment