கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமை விடுதலை செய்யுங்கள் : வலியுறுத்தியுள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமை விடுதலை செய்யுங்கள் : வலியுறுத்தியுள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள்

(நா.தனுஜா)

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியிருக்கும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள், இலங்கை அரசாங்கம் மேலும் தாமதிக்காமல் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இது குறித்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் 9 பேர் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது இலங்கையைச் சேர்ந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சம்பவத்தினால் நாம் பெரிதும் விசனமடைந்திருக்கிறோம்.

அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு வருட காலமாகத் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னரும் கூட, இன்னமும் அவருக்கெதிராகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை.

எனவே ஜசீமை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஏனைய பல்வேறு மனித உரிமை அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து நாங்களும் வலியுறுத்துகின்றோம்.

இல்லாவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்களைத் தெளிவுபடுத்தி, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவாக உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை மேலும் தாமதிக்காமல் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

அதுமாத்திரமன்றி தீவிரவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எந்தவொரு சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவை மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவானதாகக் காணப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad