மூடப்படுகிறது ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித்தாள் நிறுவனம் ! பத்திரிகை சுதந்திரத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடி! - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

மூடப்படுகிறது ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித்தாள் நிறுவனம் ! பத்திரிகை சுதந்திரத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடி!

ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி, நிறுவனம் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பத்திரிகை சுதந்திரத்திற்கு விழுந்த ஒரு மிகப் பெரிய அடியாகவே இது காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த பத்திரிகை ஹொங்கொங் மற்றும் சீனா அரசியல் தலைமையை விமர்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்நிறுவனம் மூடப்பபடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹொங்கொங்கின் மிகப்பெரும் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி நிறுவனம் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமையன்று மூடப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த வாரம் ஆப்பிள் டெய்லி அலுவலகம் அந்நாட்டு பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட 18 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

அதேவேளை ஆப்பிள் டெய்லியின் வெளியீட்டாளரும் ஹொங்கொங் ஊடக தலைவருமான ஜிம்மி லாய் கடந்த ஆண்டு இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அதன் தலைமை ஆசிரியரையும் ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்செய்தித்தாள் நீண்ட காலமாக சீனாவின் பக்கத்தில் ஒரு எதிரியாக இருந்து வருகிறது, இது ஹொங்கொங்கில் ஜனநாயக சார்பு இயக்கத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad