காபனேற்றம் செய்யப்பட்ட இயற்கையான உரம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும், அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : அமைச்சர் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

காபனேற்றம் செய்யப்பட்ட இயற்கையான உரம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும், அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : அமைச்சர் மஹிந்தானந்த

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போக உற்பத்திக்கு தேவையான காபனேற்றம் செய்யப்பட்ட இயற்கையான உரம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும். காபனேற்றம் செய்யப்பட்ட உர உற்பத்திக்கான நடவடிக்கை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நெல், மரகறி மற்றும் பழங்கள் உற்பத்தியில் இரசாயன உரங்கள் பயன்படுத்துவது மனித உடலாரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என காலம் காலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் ஏதும் இரசாயன உர பாவனையை முழுமையாக இல்லாதொழிக்க எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. 

சுற்றுச் சூழலுக்கும், மனித உடலாரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான உணவு உற்பத்தி செய்யப்படும் என சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சுற்று சூழலுக்கும், மனித உடலாரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயன உர பாவனையை தடை செய்யும் தீர்மானத்தை ஜனாதிபதி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி எடுத்தார். இத்தீர்மானம் குறித்து அரசியல் மட்டத்தில் பல மாறுப்பட்ட கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் இத்தீர்மானத்தை உலக உணவு திட்டம் வரவேற்றுள்ளது.

காபனேற்றம் செய்யப்பட்ட இயற்கையிலான உரப்பாவனையை மரக்கறி மற்றும் நெல் உள்ளிட்ட உற்பத்திகளில் ஊக்குவிக்க தேசிய மட்டத்தில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதற்காக வயம்ப பலல்கலைக்கழகத்தில் விவசாயத்துறை பீடத்தின் பீடாதிபதி மற்றும் விவசாயத் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. காபனேற்றம் செய்யப்பட்ட இயற்கையிலான உரம் இறக்குமதி செய்யும் தேவை ஏதும் தற்போது கிடையாது தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறுபோக உற்பத்திக்கான உர விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. பெரும்போக உற்பத்தியில் 8 இலட்சம் ஹெக்டயார் நிலப்பரப்பில் நெற் பயிர்ச் செய்கையினையும், 15 இலட்சம் ஹெக்டயார் நிலப்பரப்பில் மரக்கறி மற்றும் பழ உற்பத்திகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பெரும்போக உற்பத்திகளுக்கான காபனேற்றம் செய்யப்பட்ட இரசாயன உரம் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். பெரும்போக விவசாய நடவடிக்கையின் போது உர தட்டுப்பாடு ஏதும் இனி ஏற்படாது என உறுதியனிக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment