இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனைக்குத்தடை விதிக்கப்பட்டதன் பயனை மக்கள் எதிர்காலத்தில் புரிந்து கொள்வார்கள் : அமைச்சர் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனைக்குத்தடை விதிக்கப்பட்டதன் பயனை மக்கள் எதிர்காலத்தில் புரிந்து கொள்வார்கள் : அமைச்சர் மஹிந்தானந்த

(இராஜதுரை ஹஷான்)

உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனைக்குத்தடை விதிக்கப்பட்டதன் பயனை மக்கள் எதிர்காலத்தில் புரிந்து கொள்வார்கள். சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் இலக்கை குறுகிய அரசியல் நோக்கத்திற்காக விமர்சிப்பதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சேதன பசளை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தற்போது ஈடுப்பட்டுள்ளன. சேதன பசளை உற்பத்திக்கான செயற்திட்டம் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரு ஹெக்டயார் நிலப்பரப்புக்கு தேவையான சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 10,000 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

சேதனப் பசளை உற்பத்திக்கு தேவையான இடம், தொழினுட்ப இயந்திரம், உபகரணங்கள் போதுமான அளவு பிரதேச விவசாய திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றம், தேசிய கால்நடை திணைக்களம், மில்கோ நிறுவனம், விவசாய திணைக்களம், மகாவலி அதிகார சபை, கடற்தொழில் அமைச்சு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, இராணுவத்தினர், இராணுவ சேவை அதிகார பிரிவு ஆகிய தரப்பினர் ஊடா சேதன பசளை உற்பத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெரும்போக விவசாயத்திற்கு தேவையான சேதன பசளையை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சிறந்த திட்டமிடலுக்கமையவே இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு விவசாயத்துறை அமைச்சுக்கு உண்டு. இரசாயன உரம் பாவனை மனித உடலாரோக்கியத்திற்கும், மண் வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும் தொடர்ந்து இரசாயன உரப் பாவனையைப் பயன்படுத்த அனுமதியளிக்க முடியாது.

ஒரு சில பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சிறுபோக பயிர்ச் செய்கைக்கு தேவையான உர பயன்பாட்டில் பற்றாக்குறை காணப்படுகிறது. இரசாயன உரம் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்ததை குறித்து அரசியல் களத்தில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. அரசாங்கம் எடுத்த தீர்மானம் எதிர்காலத்தில் பயனுடையதாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment