கப்பலில் ஏற்பட்ட அனர்த்தம் பாரியளவான சூழல் மாசடைவுகளை ஏற்படுத்தியிருப்பதைப் போன்று பொருளாதாரத்திலும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் - எரான் விக்கிரமரத்ன - News View

Breaking

Post Top Ad

Saturday, June 5, 2021

கப்பலில் ஏற்பட்ட அனர்த்தம் பாரியளவான சூழல் மாசடைவுகளை ஏற்படுத்தியிருப்பதைப் போன்று பொருளாதாரத்திலும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் - எரான் விக்கிரமரத்ன

(நா.தனுஜா)

துறைமுகங்கள் மூலமான வாணிபத் தொடர்புகளின்போது பிரதானமாக துறைமுகம் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். எனினும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை கேள்விக்குள்ளாகியிருப்பதுடன் இது பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் மிகப்பாரியளவியலான சுற்றுச்சூழல் மாசடைவுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட அனர்த்தம் பாரியளவான சூழல் மாசடைவுகளை ஏற்படுத்தியிருப்பதைப் போன்று பொருளாதாரத்திலும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக இலங்கைத் துறைமுகம் ஏனைய உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான ஓர் துறைமுக மையமாக விளங்குகின்றது.

எதிர்வரும் சில வருடங்களில் சீனா மற்றும் இந்தியாவின் மிக வேகமான வளர்ச்சியுடன் ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மை என்பன அதிகரிக்கும். அதுமாத்திரமன்றி பல்வேறு நாடுகளும் இந்தியாவின் சந்தைக்குள் நுழைவதற்கான பாதையாக இலங்கைத் துறைமுகத்தைப் பயன்படுத்தும் நிலையுருவாகும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போதைய அனர்த்தத்தின் காரணமாக பொருளாதார ரீதியில் இலங்கைக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்படும். குறிப்பாக எந்தவொரு துறைமுகத்திலும் தமது கப்பல்களை உள்நுழைய அனுமதிப்பதற்கு முன்னர் அதன் பாதுகாப்பு தொடர்பில் நாடுகள் விசேட அவதானம் செலுத்தும்.

அது தற்போதைய அனர்த்தத்தினால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதனால் கப்பல் துறைசார் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுவதுடன் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் அதன் மூலமான வருமானங்களும் பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும்.

அடுத்ததாக கடற்தொழில்களில் ஈடுபடும் சமூகத்தினர் பாரிய வாழ்வாதாரப் பிரச்சினையைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும். உத்தியோகபூர்வமான அறிவிக்கப்படும் வரையில் சில கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது.

அப்பகுதி மீனவர்களுக்கு 5000 ரூபாவை வழங்குவதன் ஊடாக மாத்திரம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. தற்கால வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் நோக்குகையில், குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்குக்கூட அந்த 5000 ரூபா போதுமானதல்ல.

மேலும் இதனால் குறிப்பாக சுற்றுலாத்துறையும் பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுக்கும். காரணம் எமது நாடு நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட, தூய்மையான கடற்கரைகளைக் கொண்ட அழகிய தீவு என்று கூறியே சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றோம். எனினும் தற்போது அந்த அழகிய கடற்பிராந்தியமே முழுமையாக மாசடைந்திருப்பதால், அது சுற்றுலாத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்கக்கூடிய வகையில், இது குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தபட்ட தரப்பினரைப் பொறுப்புக்கூறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

அதுமாத்திரமன்றி கடற்பிராந்தியப் பாதுகாப்புடன் தொடர்புடைய சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கப்பல் மூலமான மாசடைவுகளைத் தடுப்பதற்கான சர்வதேச பிரகடனத்தில் மிகவும் வலுவான வரையறைகள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் அவை பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. அது குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும்.

அடுத்ததாக இந்தக் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புக்கள் தொடர்பில் தற்போது உடனடியாக மதிப்பீடு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. அதேபோன்று கடந்த வருடம் நீயூ டயமன் கப்பலிலும் தீப்பரவல் ஏற்பட்டது.

அந்தத் தீயை அணைப்பதற்கான செலவு உள்ளடங்கலாக நேரடி செலவுகள் உரிய கம்பனியினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட போதிலும், முழுமையாக இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை என்றே அறியமுடிகின்றது. எனவே அது குறித்தும் தற்போது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட இழப்பு தொடர்பிலும் உரியவாறு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad