உர பற்றாக்குறை எக்காரணிகளுக்காகவும் ஏற்படாது என்கிறார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

உர பற்றாக்குறை எக்காரணிகளுக்காகவும் ஏற்படாது என்கிறார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போக பயிர்ச் செய்கைக்கு தேவையான உரம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. உர பற்றாக்குறை எக்காரணிகளுக்காகவும் ஏற்படாது. தேசிய மட்டத்தில் இரசாயன உர உற்பத்திக்கான செயற்திட்டங்கள் தற்போது விவசாயத்துறை திணைக்களத்தின் கண்காணிப்புக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்றன என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

உர தட்டுப்பாடு குறித்து விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இரசாயன உரம் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. காபனேற்றம் செய்யப்பட்ட இரசாயன உரத்தை தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டன.

இரசாயன உரம் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் சிறுபோக பயிர்ச் செய்கைக்கு தேவையான உரம் பாவனையில் தட்டுப்பாடு ஏற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

பெரும் போக உற்பத்தியில் 8 இலட்சம் ஹெக்டயார் நிலப்பரப்பில் நெற் பயிர்ச் செய்கையினையும், 15 இலட்சம் ஹெக்டயார் நிலப்பரப்பில் மரக்கறி மற்றும் பழ உற்பத்திகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெரும்போக உற்பத்திகளுக்காக காபனேற்றம் செய்யப்பட்ட இயற்கையிலான உரம் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். பெரும்போக விவசாய நடவடிக்கையின் போது உர தட்டுப்பாடு ஏதும் இனி ஏற்படாது.

காபனேற்றம் செய்யப்பட்ட இயற்கையிலான உரத்தை தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இயற்கை உரம் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் விவசாய திணைக்களத்தில் உற்பத்திகள் தொடர்பில ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

பாதுகாப்பான உணவு திட்டத்தை வெற்றி பெற செய்யும் அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பயிர்ச் செய்கைக்கு தேவையான உரம் இதுவரையில் முழுமையாக வழங்கப்படவில்லை எனவும். காபனேற்றம் செய்யப்பட்ட உரங்களை அனைத்து பயிர்ச் செய்கைக்கும் பயன்படுத்த முடியாது எனவும் பொலனறுவை, அநுராதபுர பிரதேச பெரும்போக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad