சமையல் எரிவாயு நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றியுள்ளன - அனுரகுமார திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

சமையல் எரிவாயு நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றியுள்ளன - அனுரகுமார திஸாநாயக்க

புதிய சமையல் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்தி, நுகர்வோரை எரிவாயு நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய சமையல் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்துவதாக கூறி, 12.5 கிலோவாக இருந்த சிலிண்டரின் நிறையை 9.8 கிலோவாக குறைத்து சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இருந்த விலையை விடவும் புதிய சிலிண்டரில் கிலோ ஒன்றின் விலை 32 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

நுகர்வோர் அதிகார சபை விலையை அதிகரிப்புக்கு இடமளிக்காத போதும், மோசடியான வகையில் விலையை அதிகரிக்க நிறுவனத்தினர் நடவடிக்கையெடுத்துள்ளனர். 

நுகர்வோர் அதிகார சபை இந்த விடயம் தொடர்பில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது அமைச்சின் கீழ் உள்ள விடயமாக இருக்கும் போது ஏன் நீதிமன்றத்திற்கு போக வேண்டும். ஊழலை மறைப்பதற்காகவே வழக்கு விடயத்தை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

சந்தையில் 12.5 சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இதனால் புதிய சிலிண்டரை கொள்வனவு செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர்.

புதிய எரிவாயு சிலிண்டருக்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியதா? புதிய வகை எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் உண்மையானவையா? அது உண்மையென்றால் இப்போது இருக்கும் எரிவாயு செயல்தன்மை குறைந்ததா? பாதுகாப்பற்றதா? சர்வதேச தரத்தில் இல்லையா? என்பதனை கூற வேண்டும். 

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன என்று அவர் கேள்வியெழுப்பினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment