மீராவோடை, மாஞ்சோலை தனிமைப்படுத்தலும் சவால்களும் - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

மீராவோடை, மாஞ்சோலை தனிமைப்படுத்தலும் சவால்களும்

கொரோனா மரணமும் தொற்றாளர் அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மேற்கு, மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை, பதுறியா நகர் பிரதேசங்கள் முழுவதுமாக தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டது.

பயணத்தடை அமுலிலிருக்கும் காலப்பகுதியில் வெளியில் செல்ல முடியாத நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்த சூழலில் ஒட்டு மொத்தமாக முழுப் பிரதேசமும் தனிமைப்படுத்தப்பட்டமை மக்கள் மத்தியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஒழிப்புக்காக அரசின் அறிவித்தலின் பேரில் சுகாதாரத் துறையினரும் பாதுகாப்புத் துறையினரதும் முன்னெடுப்புக்களுக்கு கட்டுப்பட்டு, பயணத்தடை காரணமாக முடக்கப்பட்டிருந்த மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அடுத்த சில தினங்களில் பயணத்தடை நீக்கப்படும். வழமைக்குத் திரும்பும் தமது அன்றாட வேலைகளை, தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மக்களுக்கு திடீர் தனிமைப்படுத்தல் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அப்பிரதேச மக்களின் உணர்வலைகளிலிருந்து அவதானிக்க முடிகின்றது.

மிகவும் வறிய மக்களையும் தினக் கூலிகளையும் கொண்டுள்ள பிரதேசமாகக் காணப்படும் குறித்த பகுதி மக்கள் கடந்த தினங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, நாளாந்த வருமானங்களை இழந்து, அன்றாட உணவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கின்ற வேளை முழுதான முடக்கத்தை தாக்கிக் கொண்டு தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதை மக்களது ஆதங்கங்களிலிருந்து உணரக்கூடியதாக உள்ளது.

குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா மரணம் மற்றும் தொற்றாளர் அதிகரிப்பினால் சுகாதாரத் துறையினரால் பிரதேசத்தை முடக்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியும், சுகாதாரத் துறையினரும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதுடன், பொதுமக்கள் கட்டாயம் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிர்ப்பந்த நிலையும் காணப்படுகின்றது.

சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் மாத்திரம் கொரோனாவைக் கட்டுப்படுத்திட முடியாது. பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது.

இந்த வேளையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் குறித்த தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டாலும், தனிமைப்படுத்தல் முன்னெடுப்பு தொடர்பில் பிரதேச சமூக அமைப்புக்கள், முக்கியஸ்தர்கள், குறிப்பாக, இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தலிலுள்ள கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபரிடமோ எவ்வித கலந்துரையாடலுமின்றி திடீரென மேற்கொள்ளப்பட்டமை இப்பிரதேச மக்களுக்கு பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச சமூக நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

பயணத் தடைச்சட்டம் அமுலிலுள்ள நிலையில், எவ்வித தயார்படுத்தல், முன்னாயத்த நடவடிக்கைகள் இல்லாமல் திடீரென தனிமைப்படுத்தலுக்குச் செல்வது சாத்தியப்படாத ஒன்றாகவே உள்ளது.

தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்துகளைக் கொள்வனவு செய்து கொள்ளக்கூட அவகாசம் வழங்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சஞ்சல நிலையினைத் தோற்றுவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து வெளிச் செல்ல முடியாமல் பாதைகள் வேலிகள் இட்டு மூடப்படுள்ளமையினால் அவசர நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச்செல்ல அம்புயூலான்ஸ், வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதுடன், பிரசவ வலியால் அவதிப்பட்ட தாயொருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்ட அனுபவத்தினை பாதிக்கப்பட்ட உறவினர் ஆதங்கமாகத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான அவசர நிலைமைகளின் போது யாரைத் தொடர்பு கொள்வது?, எவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொள்வது? போன்ற எவ்வித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமையும் இது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்படாமையும் மக்களை சிரமத்திற்குள் தள்ளியுள்ளது.

இவ்வாறான அவசர, அவசிய நிலைமைகளின் போது உதவ இப்பிரதேசத்தை மையப்படுத்தி தொண்டர் குழுவொன்றை நியமிக்குமிடத்து பொதுமக்கள் எதிர்நோக்கும் அவசர நிலைமைகளின் போது அசெளகரியங்களை கையாள வாய்ப்பாக அமையும்.

இவ்வாறான அசாதாரண சூழலில் களப்பணி மேற்கொள்ளும் திறமையான இளைஞர் அணியினர் இப்பிரதேசத்தில் காணப்படுவதுடன், அவர்களை இணைத்து செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது மக்களின் இடர்பாடுகளைத் தவிர்த்திருக்க முடியுமென்ற கருத்து மக்கள் மத்தியிலுள்ளது.

தனிமைப்படுத்தல் தினத்தில் கிடைக்கப் பெற்ற தகவலின்படி சுகாதாரப் பரிசோதகர் பிரிவின் அடிப்படையில் மீராவோடை மேற்கில் 45, கிழக்கில் 32, மாஞ்சோலை-பதுறியாவில் 15 பேர் என மொத்தமாக 92 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால்தான் இந்த தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில், சலூன் கடையுடன் தொடர்புபட்ட ஒரு குடும்பத்தில் இருவரும் பலசரக்கு கடையில் பொருள் கொள்வனவு செய்த ஒரு குடும்பத்தினரும் தவிசாளர் உட்பட அவரது குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் வைத்தியசாலையில் மரணமடைந்த ஒரு குடும்ப உறுப்பினர்களுமாக மாஞ்சோலை-பதுறியாவில் 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாஞ்சோலைப் பிரதேசத்தில் இரு வீடுகள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரன், சகோதரி இருவரே தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பதுறியா நகர் பிரதேசத்தில் தவிசாளர் உட்பட அவரது குடும்பம் வைத்தியசாலையில் மரணித்தவரின் குடும்பம், சலூன்கடைக்காரர், பலசரக்கு கடையுடன் தொடர்புபட்ட ஒரு சிலர் என குறிப்பிட்ட ஒரு சில குடும்பத்தினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 1,272 குடும்பங்களைக் கொண்ட கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சில குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட தொற்றுக்காக முழு கிராம சேவகர் பிரிவையும் முடக்கியமை நியாயமற்றவை என கிராம மட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆதங்கங்களை முன்வைப்பதையும் இதன் காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.

அதே நிலையில்தான் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மீராவோடை கிழக்கு, மேற்கில் 32, 45 என்ற அடிப்படையில் தொற்றாளர் அடையாளங் காணப்பட்டனர். இதனை வைத்து எந்தவித கலந்தாலோசனையுமின்றி, மீராவோடைப் பிரதேசமும் முடக்கப்பட்டுள்ளது.

ஒப்பீட்டு ரீதியாக மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவிற்குரிய அதே காரண காரியங்களே மீராவோடை கிழக்கு, மேற்குக்கும் குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டியது.

அத்தோடு, இப்பிரதேசங்களிலுள்ளோர் அன்றாடம் கூலித்தொழில் செய்வோராகவும் மீன்பிடி, விவசாயம் போன்றவற்றில் ஈடுபடுவோராகவும் காணப்படுவதன் காரணமாக அவர்கள் தத்தமது பணிகளுக்கு போய் வர அனுமதி அட்டை வழங்கும் நடவடிக்கைகளை வழங்குமிடத்து, பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக, விவசாயத்தில் ஈடுபடுவோர் முடக்கப்படுகின்ற போது, வேளாண்மை கவனிப்பாரற்ற நிலைக்குச் சென்று அழிவு நிலைக்கு செல்வதனால் பாரிய நஷ்டங்களை விவசாயிகளும் அதனை நம்பி வாழ்க்கை நடாத்துவோரும் எதிர்கொள்ள நேரிடும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தனிமைப்படுத்தல் கடந்த முடக்கங்களினாலும் அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டோருக்கு மென்மேலும் வலியையே எற்படுத்தும்.

அத்தோடு, இப்பிரதேசத்தில் ஒரு மரணமும் குறைந்தளவிலான தொற்றாளர்களும் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பிரதேசங்களை முடக்காமல் முன்னரான காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்பட்ட குறித்த வீதிகளை மட்டும் முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவண செய்வதோடு, ஏனைய பிரதேசங்களை விடுவித்து, கட்டுப்பாட்டுத் தளர்வுகளை மேற்கொண்டால் மக்கள் கட்டுப்பாட்டுடன் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, தனிமைப்படுத்தல் பிரதேசங்களிலுள்ள தமக்குத் தேவையான நிவாரண உதவிகள் விரைவாகக் கிடைக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுப்பதோடு, அரச உதவிகள் மாத்திரம் போதுமானதாக இருக்காது என்றபடியினால், சமூக நிறுவனங்களும் தம்மாலியன்ற உதவிகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமென்பது இப்பிரதேச மக்களின் வேண்டுகோளாகும்.

குறிப்பாக, கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் திடீர் சுகயீனமுறுகின்ற போது, அவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லத்தேவையான துரித ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு, வாகன வசதியும் தயார்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுக்காக தனியானதொரு தொண்டர் குழு ஏற்படுத்தப்படுவது அவசியம்.

அத்துடன், தனிமைப்படுத்தல் அமுலிலுள்ள பிரதேசங்களில் அத்தியாசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க விஷேட அனுமதி வழங்கப்பட்ட வியாபாரிகள் ஈடுபடுவதுடன், அவசியமான வியாபார இஸ்தலங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மேலும், தனிமைப்படுத்தல் சட்டங்களையும் பயணத் தடையையும் பொதுமக்கள் மதித்து நடப்பதுடன், சுகாதாரத் துறையினர் பாதுகாப்புத் தரப்புனர் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினர் வழங்கிட வேண்டும்.

இக்காலப்பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி சட்டத்துக்கு முரணாக நடப்பதை சகல மட்டத்தினரும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

பிரதேசத்திலிருந்து ஒரு சிலர் விடுத்த உத்தியோகப்பற்றற்ற வேண்டுகோள்களூடாக மேலதிகரியின் அழுத்தங்களின் அடிப்படையில் குறித்த தனிமைப்படுத்தலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் கருத்து தொடர்பிலும் தெளிவுகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

இது விடயத்தில், மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணி, மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைமை மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எம்.ஐ.லெப்பைத்தம்பி

No comments:

Post a Comment