அமெரிக்காவினால் முதலாம் கட்டமாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ள தடுப்பூசி திட்டத்தில் உள்ளடக்கப்பட்டது இலங்கை - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

அமெரிக்காவினால் முதலாம் கட்டமாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ள தடுப்பூசி திட்டத்தில் உள்ளடக்கப்பட்டது இலங்கை

நா.தனுஜா

அமெரிக்காவினால் உலக நாடுகளுக்கு முதலாம் கட்டமாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ள 25 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகள், தமக்கு தடுப்பூசியைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றன.

அதன் காரணமாக அமெரிக்கா அதன் வசமுள்ள தடுப்பூசிகளில் குறைந்தபட்சம் 80 மில்லியன் தடுப்பூசிகளை இம்மாத இறுதிக்குள் உலகளாவிய ரீதியில் தேவையுடைய பல்வேறு நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயை முழுமையாக இல்லாதொழிப்பதற்காகச் செய்யக்கூடியதொரு சேவையாகவே இவ்வாறு தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதமானவை கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இதன்போது இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவு, தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேவேளை 25 சதவீதமான தடுப்பூசிகள் அவசர தேவையுடைய நாடுகளுக்கு விரைவாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

அதன்படி முதலாம் கட்டமாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ள 25 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நாடுகளின் பட்டியலும் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தமாக 7 மில்லியன் தடுப்பூசிகள் ஆசிய நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலைதீவு, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பபுவா நியூகினியா, தாய்வான் மற்றும் பசுபிக் தீவுகள் ஆகியவை ஆசியப் பிராந்தியத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே 600,000 அஸ்ரா செனேகா தடுப்பூசிகள் உள்ளடங்கலாக கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு அமெரிக்காவிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment