கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவ அமெரிக்காவின் மகத்தான பங்களிப்பு இலங்கையை வந்தடைந்தது.! - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவ அமெரிக்காவின் மகத்தான பங்களிப்பு இலங்கையை வந்தடைந்தது.!

(சி.எல்.சிசில்)

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட அவசர உதவிப் பொருட்கள் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளன.

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தென்கிழக்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு, தமது சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் ஊடாக விமானங்களில் உதவிகளை அனுப்புவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

இந்தத் தொகுதியில் 8 இலட்சத்து 80 ஆயிரம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், 1,200 துடிப்பு ஒக்சி மீற்றர்கள் மற்றும் 200 செயற்கை சுவாசக் கருவிகளை முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் உதவும் வகையில் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அத்தோடு நாட்டின் சுகாதாரத் துறையை இந்த உதவிகள் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அரசு கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு 11.3 மில்லியன் டொலர்களையும், மோசமாகப் பாதிப்புக்குள்ளான நோயாளிகளைப் பராமரிப்பதற்காக 200 செயற்கை சுவாசக் கருவிகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தால் இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இவ்வாறு அவசர மருத்துவப் பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இலங்கை, இந்தியா உள்ளிட்ட 17 ஆசிய நாடுகளுக்கு 7 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad