அமுலிலுள்ள பயணத் தடையினால் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை, பொருளாதார ரீதியில் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர், பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பேசவுள்ளேன் - பேராசிரியல் திஸ்ஸ விதாரண - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

அமுலிலுள்ள பயணத் தடையினால் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை, பொருளாதார ரீதியில் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர், பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பேசவுள்ளேன் - பேராசிரியல் திஸ்ஸ விதாரண

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 பெருந்தொற்றினை கருத்திற் கொண்டு தற்போது நாடு தழுவிய ரீதியில் அமுலில் உள்ள பயணத் தடையை நீடிக்க முன்னர் மக்கள் அத்தியாசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான சிறந்த செயற்திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுலில் உள்ள பயணத் தடையினால் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. சிறந்த திட்டங்களை செயற்படுத்துமாறு பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியல் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பயணத் தடை அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளதே தவிர குறைவடையவில்லை. பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

இவ்வாறான காரணிகளை கருத்திற் கொண்டு 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள பயணத் தடையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்குமாறு சுகாதார தரப்பினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். 

பெரும்பாலான மக்கள் தற்போது அமுலில் உள்ள பயணத் தடையினை பொருட்படுத்தவில்லை. அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காகவும், தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் பொதுமக்கள் வீதிகளில் நடமாடுகிறார்கள்.

மேலும், அங்காடி விற்பனை ஊடாக அத்தியாவசிய பொருட்கள் தற்போது விநியோகிக்கப்படுகிறது. இச்சேவையை பெற்றுக் கொள்ள பெரும்பாலான மக்களிடம் வசதி கிடையாது. பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்கள் அதிருப்தியளிக்கின்றன. விசேட வைத்திய நிபுணர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இவ்விடயம் குறித்து பிரதமரிடம் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad